Published : 30 Jun 2021 07:09 PM
Last Updated : 30 Jun 2021 07:09 PM

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகைக் குடியிருப்பு; ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகைக் குடியிருப்பு மற்றும் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 30) வெளியிட்ட அறிவிப்பு:

"எம்.கே.டி என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திரக் கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தவர் ஆவார். அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் உலா வந்தன. குறிப்பாக, 1944ஆம் ஆண்டு வெளியான 'ஹரிதாஸ்' என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராகக் கருதப்பட்டார்.

தமிழ்த் திரையுலகில் மிக பிரபலமாக அக்காலகட்டத்தில் விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது மிகவும் வறிய நிலையில், குடியிருக்க வீடின்றி, மிகவும் சிரமமான சூழ்நிலையில் வசித்து வருவதை அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சாய்ராம் குடும்பத்தினருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், பொது ஒதுக்கீட்டின் கீழ் வீடு ஒன்றினை ஒதுக்கித் தர உத்தரவிட்டுள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் ஆணையிட்டுள்ளார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x