

கோவையில் பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்ட அவுட்காய் வெடித்து நாய் தலை சிதறி பலியான சம்பவத்தில் 2 பேரைக் கைது செய்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை, பெரியநாயக்கன் பாளையம் வனத்துறையினர் இன்று (ஜூன் 30) காலை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூச்சியூர் அருகிலுள்ள கதிர்நாயக்கன் பாளையம் ரங்கசாமி என்பவரது பட்டா நிலத்தில் வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர், அவுட்காய் வெடித்ததில் தலை சிதறி நாய் ஒன்று உயிரிழந்து கிடப்பதைக் கண்டனர்.
தொடர்ந்து அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாகச் சென்ற இரண்டு பேரைப் பிடித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் காட்டுப் பன்றிகளை வேட்டையாட அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை வைத்தது தெரியவந்துள்ளது. பின்னர், அவர்களிடமிருந்து 5 அவுட்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், முருகேசன் ஆகியோர் மீது சட்டவிரோதமாக வெடி வைத்ததாக துடியலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இருவருக்கும் வனத்துறை சார்பில் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவுட்காய் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடியது தொடர்பாக 2020-ம் ஆண்டு முதல் அன்னூர், பெரியநாயக்கன் பாளையம், காரமடை மற்றும் துடியலூர் காவல் நிலையங்களில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 அவுட்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புகார் தெரிவிக்கலாம்
இது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கூறும்போது, "அவுட்காய் தயாரிப்பதும், அதைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடுவதும் சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியாகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பாகத் தகவல் தெரிந்தால் 94981 81212 என்ற தொலைபேசி எண்ணிற்கும், 77081 00100 என்றால் வாட்ஸ் அப் எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்" என்று தெரிவித்தார்.