Published : 30 Jun 2021 06:48 PM
Last Updated : 30 Jun 2021 06:48 PM

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை முதலாவது இடத்துக்குக் கொண்டுவருவேன்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை முதலாவது இடத்திற்குக் கொண்டுவருவேன் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30) இருங்காட்டுக்கோட்டை, ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:

"கரோனா என்ற பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவ நெருக்கடி மட்டுமல்லாமல், நிதி நெருக்கடியையும் சமாளிக்க வேண்டிய சூழல் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், அரசுக்குத் தோள் கொடுக்குமாறு, தமிழக மக்களிடத்தில் முதல்வர் என்கின்ற முறையில் நான் கோரிக்கை வைத்தேன். பல்வேறு தொழில் நிறுவனங்கள் இதில் பங்கெடுத்து, பல்வேறு கோணங்களில் பல உதவிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

அதில் குறிப்பாக, ஹூண்டாய் நிறுவனம் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி அளித்து அரசுக்குத் துணை நின்றிருக்கின்றது. அதற்காக முதலில் நான் இந்த நிறுவனத்திற்கு, தமிழக அரசின் சார்பில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, மருத்துவ உபகரணங்கள், முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர்களை இந்த ஹூண்டாய் நிறுவனம் வழங்கியிருக்கிறது. இந்த நிறுவனத்திற்கும், இதன் நிர்வாகப் பொறுப்பில் இருக்கின்ற அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

1996-ம் ஆண்டுக்கு முன்னால், இந்தச் சாலையில் பயணம் செய்கிறவர்களுக்குத் தெரியும், பூந்தமல்லியைத் தாண்டினால் நகரம் இருப்பது போலவே தெரியாது. ஆனால், இன்றைக்கு பூந்தமல்லியைத் தாண்டினால் பல்வேறு தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன என்றால், அதற்குக் காரணம் அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதிதான் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

1996-ம் ஆண்டுக்குப் பிறகு சென்னையைச் சுற்றி பல்வேறு தொழிற்சாலைகளை உருவாக்கியவர் அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி. சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை, சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை, சென்னையிலிருந்து சோழிங்கநல்லூர் வரை, இப்படிப் பல்வேறு தொழிற்சாலைகள் பல பகுதிகளில் 1996-ம் ஆண்டுக்குப் பிறகு, அதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு கருணாநிதியால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதேபோலத்தான், இன்றைய தமிழக அரசும் உருவாக்குவதற்கு திட்டமிட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்த, அத்தகைய சூழலில்தான் இந்த ஹூண்டாய் நிறுவனத்திற்கு நான் வந்திருக்கிறேன். 1998-ம் ஆண்டு முதன்முதலாக ஹூண்டாய் கார் நிறுவனத்தின் உற்பத்தியைத் தொடங்கி வைத்தவர் முதல்வராக இருந்த கருணாநிதிதான்.

2008-ம் ஆண்டு இரண்டாவது யூனிட்டைத் தொடங்கி வைத்தவரும் முதல்வராக இருந்த கருணாநிதிதான். 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே ஹூண்டாய் நிறுவனத்திற்கு, அப்போது நான் துணை முதல்வராக இருந்த நான் அந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நிறுவப்பட்ட தொழிற்பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கான விடுதிக் கட்டிடத்தைக் காணொலிக் காட்சி வாயிலாக நான் திறந்துவைத்தேன்.

பொதுவாகவே, தலைவர் கருணாநிதி எதைத் தொடங்கிவைத்தாலும் அது எந்த அளவிற்கு செழிக்கும், பலருக்குப் பயன்படும், காலங்கள் கடந்து நிற்கும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அதில் குறிப்பிடத்தக்க உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஹூண்டாய் நிறுவனம் ஒன்று என்று நாம் பெருமையோடு சொல்லியாக வேண்டும்.

ஹூண்டாய் கார் நிறுவனத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, இந்த நிறுவனத்தை எதற்காகப் பாராட்டினார் என்று சொன்னால், 1,238 பேருக்கு நீங்கள் வேலை கொடுத்தீர்கள், அதற்காகப் பாராட்டினார். அதில், 90 விழுக்காடு நபர்கள் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்பதைச் சொல்லிப் பாராட்டியிருக்கிறார்.

இன்னும் சொன்னால், இந்த நிறுவனம் அமைப்பதற்காக இந்த வட்டாரத்தைச் சார்ந்த இருங்காட்டுக்கோட்டை, கீவளூர், தண்டலம், செட்டிமேடு ஆகிய ஊர்களைச் சார்ந்த மக்களில் 637 பேருக்கு வேலை கொடுத்தீர்கள், அதையெல்லாம் குறிப்பிட்டு, கருணாநிதி அன்றைக்குப் பாராட்டு தெரிவித்தார்.

கார் தயாரிப்பு நிறுவனமாக மட்டுமல்லாமல், சேவை மனப்பான்மையோடு ஹூண்டாய் நிறுவனம் இயங்கி வருவதை முதல்வர் கருணாநிதி 1998-ம் ஆண்டே பாராட்டியிருக்கிறார். அதே சேவை மனப்பான்மையோடு நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் 5 கோடி ரூபாயை கரோனா தடுப்பு நிதியாக நீங்கள் வழங்கியிருக்கிறீர்கள் என்பது போற்றத்தக்கது.

என்னைப் பொறுத்தவரையில், ஹூண்டாய் நிறுவனத்தைத் தமிழகத்தில் அதிக முதலீடு செய்த நிறுவனமாக மட்டுமல்ல, அதிக கார்கள் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனமாக மட்டுமல்ல, ஸ்ரீபெரும்புதூர் பகுதியை உலக வரைபடத்திலே ஒரு மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற்றியதில் முக்கியப் பங்குகொண்ட நிறுவனமாக இந்த ஹூண்டாய் நிறுவனத்தைப் பார்க்கிறேன். அதற்காக உங்களைப் பாராட்ட, இந்த அளவிற்கு முன்னேறுவதற்கு உழைத்திருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இதுவரை 1 கோடி கார்களை ஹூண்டாய் கார் நிறுவனம் உற்பத்தி செய்திருப்பது என்பது ஒரு மிகப்பெரிய சாதனை. மிகக்குறுகிய காலத்திலேயே, இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய கார் உற்பத்தியாளர் என்ற பெருமையையும், வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதில் முதன்மை நிறுவனம் என்ற பெருமையையும் ஹூண்டாய் கார் நிறுவனம் பெற்றிருக்கிறது.

தமிழகத்தில் இதுவரை 31.3 லட்சம் கார்களை உற்பத்தி செய்து 88 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறீர்கள். இதனால் உங்கள் நிறுவனம் மட்டும் வளரவில்லை, தமிழகமும் சேர்ந்து வளர்ந்திருக்கிறது, இதுதான் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மகத்தான சேவையை ஆற்றிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் சேவையை இன்னும் கூடுதலாக விரிவுபடுத்த வேண்டும் என்றும், ஹூண்டாய் நிறுவனத்தைப் போலவே மற்ற நிறுவனங்களும் தமிழகத்தில் தங்களது முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்றும் நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழக அரசு, தமிழகத்தை தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக மாற்ற வேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அனைத்துத் தொழில் நிறுவனங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதற்கான அடிப்படை திட்டமிடுதலை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். உலகப் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்திருக்கிறோம். இது, தொழில் நிறுவனங்களுக்கு மாபெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தின் மீது உலக ஊடகங்களின் கவனம் குவிய, இந்த அறிவிப்பு அடித்தளம் இட்டிருக்கிறது. இந்தக் குழு அனைத்துப் பொருளாதார மேதைகளாலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் குழுவின் ஆலோசனையைப் பெற்று தமிழக அரசு நிச்சயமாகச் செயல்படும். திட்டங்களை வகுப்பதற்காகவும் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படிப் பல்வேறு முடிவுகளை, ஆய்வுகள் செய்து அனைத்து வகையான மேம்பாடுகளையும் நோக்கிச் செல்ல தமிழக அரசு உறுதி கொண்டிருக்கிறது.

முதலீடுகளை அதிகம் பெற முதலில் தேவையானது நிதியல்ல, நம்பிக்கைதான். அதுதான் முதல் முதலீடு. அந்த நம்பிக்கை கொண்ட அரசாக தமிழக அரசு அடையாளம் காணப்படுவதைப் பார்க்கும்போது, எனக்கு உள்ளபடியே பெருமையாக இருக்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் இப்படிப்பட்ட நம்பிக்கையை நாங்கள் பெற்றிருக்கிறோம். தொழில் துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டினை உறுதிப்படுத்த வேண்டும், பன்முகத் தொழில் வளர்ச்சியை உருவாக்க வேண்டும், புதிய தொழிற்சாலைகளை ஏராளமாக உருவாக்க வேண்டும், ஏற்கெனவே இருக்கக்கூடிய தொழிற்சாலைகளை விரிவுபடுத்த வேண்டும், ஒரே இடத்தில் தொழில்கள் குவிந்துவிடக் கூடாது, அனைத்து மாவட்டங்களிலும் தொழில்கள் பரவலாக அமைக்கப்பட வேண்டும், அப்படி அமைக்கப்படும் தொழிற்சாலைகளில் அந்தந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள், தமிழ்நாட்டு இளைஞர்கள் பெருவாரியான வேலைவாய்ப்பைப் பெற வேண்டும்.

தமிழகத்தை நோக்கி தொழிற்சாலைகள் முதலீடு செய்ய முன்வரும் சூழல் உருவாக்கப்பட வேண்டும், தொழில் தொடங்க சாதகமான பகுதியாக அனைத்து மாவட்டங்களையும், நகரங்களையும் மாற்ற வேண்டும் என்கிற அந்த இலக்குகளோடு அரசு செயல்படத் தொடங்கியிருக்கிறது. இந்த இலக்கை நிச்சயமாக விரைவில் அடைவோம். அதற்கு ஹூண்டாய் நிறுவனம் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

தங்களைப் போலவே, மற்ற நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தொழில்களைத் தொடங்க ஹூண்டாய் நிறுவனம் ஊக்கப்படுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கக்கூடிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தைத் தொழில் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக ஆக்கும் பணியை சிறப்பாக முன்னெடுத்து வருகிறார். 'இந்தியாவின் டெட்ராய்ட்' என்று சென்னை அழைக்கப்படும் அளவுக்கு கார் உற்பத்தியில், அன்றைய திமுக ஆட்சியில் முன்னேற்றம் கண்டோம். இந்தியாவில் தொழில் வளர்ச்சி மிகுந்த மாநிலம் என்ற பெயரையும், புகழையும் நாம் மீண்டும் அடைய வேண்டும்.

1998-ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனத்தின் முதலாவது உற்பத்தியைத் தொடங்கிவைத்துப் பேசிய கருணாநிதி, 'தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் இருக்கிறது, அதனை மூன்றாவது இடத்திற்குக் கொண்ட வருவேன்' என்று உறுதி எடுத்தார், அந்த இலக்கை அடைந்தார்.

அதேபோல், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை முதலாவது இடத்திற்குக் கொண்டுவருவேன் என்று நான் இந்த நிகழ்ச்சியில் உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த உறுதியை நிறைவேற்ற ஹூண்டாய் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

தொழில் வளர்ச்சியின் மூலமாக, நாடும், மக்களும், சமூகமும் முன்னேறுகிறது. எனவே, தொழிற்சாலைகளை ஒரு வர்த்தகமாகப் பார்க்காமல், வாழ்க்கையாகப் பார்த்து எங்களது செயல்பாடுகள் அமையும் என்பதையும் நான் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x