Published : 30 Jun 2021 05:52 PM
Last Updated : 30 Jun 2021 05:52 PM

பழங்குடிகளுக்கு 100% கரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியாவின் முதல் மாவட்டம்: நீலகிரி சாதித்தது எப்படி?

ஆனைக்கட்டி கிராம தலைவர் பொம்மராயன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட போது எடுத்த படம்: எம்.சத்யமூர்த்தி

நீலகிரி

தடுப்பூசி போடத் தகுதிவாய்ந்த பழங்குடிகள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தி, இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்குகிறது நீலகிரி மாவட்டம். நீலகிரி மாவட்டத்தில் 21,800 பழங்குடிகள் கரோனா தடுப்பூசி செலுத்தத் தகுதி வாய்ந்தவர்களாவர். அவர்கள் அனைவருக்கும் நேற்று (ஜூன் 29) மாலையுடன் கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டுவிட்டது. இதன்மூலம், நாட்டிலேயே பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி மாவட்டம் பெற்றுள்ளது.

இந்த சாதனை சாதாரணமாக நிகழவில்லை. பழங்குடியினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், களப்பணியாளர்கள், அரசு சாரா அமைப்புகள், சுகாதாரத்துறை எனப் பல தரப்பின் பங்கும் நிறைந்துள்ளது. பலரும் இரவு, பகலாக உழைத்ததன் மூலம் இச்சாதனை நிகழ்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 427 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 7.35 லட்சம். இதில், பழங்குடியின மக்கள்தொகை 27,032. இவர்களுள், தோடர்கள், கோத்தர்கள், குறும்பர்கள், பளியர்கள், இருளர்கள், காட்டுநாயக்கர்கள் ஆகியோர், பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களாக (Particularly most vulnerable groups) இந்திய அரசால் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். எண்ணிக்கையில் குறைந்துவரும் இந்தப் பழங்குடி மக்களைக் காக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளித்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பழங்குடி மக்களுக்கு 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தியது எப்படிச் சாத்தியமானது என்பது குறித்து, நம்மிடம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசினார்.

"கரோனா முதல் அலையின்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடிகள் பாதிக்கப்படவில்லை. இரண்டாம் அலையில் பழங்குடிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இயற்கையுடன் இணைந்திருப்பதால் தங்களுக்கு கரோனா போன்ற நோய்கள் வராது என முன்பு நினைத்தனர். ஆனால், அந்த நம்பிக்கையை கரோனா தொற்று தகர்த்துவிட்டது.

தேசிய அளவில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுவில் 6 பழங்குடியின மக்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளனர். அந்த 6 பழங்குடியினத்திலும் மக்கள்தொகை குறைந்துவருகிறது. அவர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதனால், தீவிரமாக கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என எண்ணினோம்.

பழங்குடிகள் வெவ்வேறு இடங்களுக்கு நகரக்கூடியவர்களாக உள்ளனர். அவர்களுள் பலரும் வனத்துறையில் பணிபுரிகின்றனர். அதனால், அவர்களை முதலில் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தினோம். முதுமலை புலிகள் காப்பகம் இருப்பதால், அங்குள்ள விலங்குகளையும் காக்க வேண்டும் என்பதால், வனத்துறையில் உள்ள பழங்குடியின மக்களைக் காப்பது முதன்மையாக இருந்தது.

பழங்குடி மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டபோது. உடன் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா

ஆரம்பத்தில் பழங்குடிகள் மத்தியில் கரோனா தடுப்பூசி குறித்து தயக்கம் இருந்தது. தடுப்பூசி குறித்து பொய்யான தகவல்கள் பரவின. முதலில் தடுப்பூசி குறித்து பழங்குடியினத் தலைவர்களுக்கு விளக்கினோம். அவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தினோம். பின்னர், அவர்களின் மொழியிலேயே பழங்குடியினத்தைச் சேர்ந்த தலைவர்கள் மூலம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

தடுப்பூசி செலுத்தினால் இறப்பு, குழந்தையின்மை பிரச்சினை இருக்கும் என வதந்திகள் பரவின. தடுப்பூசி செலுத்தியபின் காய்ச்சல் வந்தாலே பயந்துவிடுவார்கள். அதனை முறியடிக்க அவர்களின் மொழியிலேயே பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். வீடியோ, ஆடியோ மூலம் விழிப்புணர்வுச் செய்திகளை அனுப்பினோம்.

சொந்த மொழியிலேயே விழிப்புணர்வை ஏற்படுத்தும்போது, பழங்குடியின மக்களுக்கு நம்பிக்கை வந்தது. அரசு சாரா அமைப்புகள், 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பெரும்பங்காற்றின. இப்போது, தடுப்பூசி குறித்த தயக்கம் இல்லை.

நாட்டிலேயே பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் நீலகிரி மாவட்டம் என்று கருதுகிறேன்" என்கிறார், நீலகிரி மாவட்ட ஆட்சியர்.

கரோனா சிகிச்சை, தடுப்பூசி குறித்த பழங்குடி மக்களின் அச்சம், நீலகிரி மாவட்டத்தின் நில அமைப்பு ஆகியவை பெரும் சவாலாக இருந்ததாக ஆட்சியர் கூறுகிறார்.

"பழங்குடியின மக்கள் உடல்நிலை சரியில்லையென்றால்கூட, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ, மருத்துவமனைக்கோ வரமாட்டார்கள். எனவே, அந்தந்த கிராமங்களுக்கே சென்று முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்தினோம்.

2-3 இடங்களைத் தவிர சாலை இணைப்புகளை மாவட்டத்தில் ஏற்படுத்தியாகிவிட்டது. 8 குடும்பங்கள் மட்டுமே உள்ள சில கிராமங்கள்கூட இங்கு இருக்கும். அதற்கு 7-8 கி.மீ. நடந்துசென்று தடுப்பூசி செலுத்தினோம். யாரும் விடுபடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

ஆணைப்பள்ளம் கிராமத்தில் 5 கி.மீ நடந்துசென்று தடுப்பூசி செலுத்தினோம். சடையன்கோம்பை, சின்னாலகோம்பை, ஆனைப்பள்ளம் ஆகிய 3 கிராமங்களுக்கும் நடந்துசென்றுதான் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் வந்து பார்த்துச் சென்ற பிறகு, மாவட்டத்திற்கு வரும் தடுப்பூசிகளில் பழங்குடியினருக்கு எனப் பிரித்து அனுப்பப்படுகிறது" என்றார், மாவட்ட ஆட்சியர்.

நீலகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்றபோது.

கரோனா தடுப்பூசி குறித்த அச்சத்தைப் பழங்குடிகள் மத்தியில் போக்கியது எப்படி என, 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை வழங்கிவரும் நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க செயலாளர் எம்.ஆல்வாஸ் நம்மிடம் விளக்கினார்.

"பழங்குடிகளுள் இப்போது கர்ப்பிணிப் பெண்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஸ்கேன், ஊசி செலுத்துவதற்கு மருத்துவமனைகளுக்குச் செல்வதால் அவர்கள் தொற்றுப் பரவலுக்கு ஆளாகின்றனர். அப்படி, தற்போது 3-4 கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் அலையில் 3 பழங்குடி கிராமங்கள் பாதிக்கப்பட்டன. பழங்குடி இளைஞர்கள் கேரளாவுக்கு வேலைக்குச் செல்கின்றனர். அப்படிச் சென்றுவிட்டு ஊருக்கு வரும்போது தொற்று ஏற்படுகிறது. பழங்குடிகள் நெருக்கமாக இருப்பதால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தடுப்பது கஷ்டம். அதனால்தான் அவர்களுக்கு தீவிரமாக கரோனா தடுப்பூசி செலுத்த முனைந்தோம். இதில், மாவட்ட ஆட்சியர், ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி மகத்தானது.

அரசு சாரா அமைப்பு என்பதைத் தாண்டி, நாங்கள் பழங்குடியின தலைவராகவும் இருப்பதால், நாங்கள் அவர்களிடம் எடுத்துச் சொன்னோம். கரோனா தடுப்பூசியால் யாரும் இறக்கவில்லை எனப் புரியவைத்தோம்.

குழந்தைப் பிறப்புக்குக்கூட பழங்குடியினர் மருத்துவமனைகளுக்குச் செல்வதில்லை. ஆரம்பத்தில் 10-15 கிராமங்களில் பரிசோதனை முயற்சியாக மேற்கொண்டோம். முதலில் நாங்கள் ஆனைக்கட்டிக்குச் சென்றபோது, தலைவர்கள், பெண்கள் என 10 பேர் இருந்தனர். அடுத்த நாள் சென்றால் யாரும் வரவில்லை. எனவே, நாங்களே வீடு வீடாகச் சென்று பேசினோம்.

குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடலாம், உங்களுக்குப் போடக்கூடாது என்பதில் என்ன நியாயம்? எனக் கேட்டோம். எப்படியோ பேசி, 60 பேரை அழைத்து வந்தோம். அதன்பின், ஒரே நாளில் 160 பேருக்குத் தடுப்பூசி செலுத்தினோம். எங்களை அதிகம் பேர் அறிந்திருந்ததால், எங்களை நம்பினர்.

தடுப்பூசி என்பதைவிட, அவர்களுக்கு 'கரோனா ஊசி' என்றால் எளிதாகப் புரிகிறது. முதியவர்களைவிட இளையவர்கள் அதிகம் பேர் தடுப்பூசி குறித்த அச்சத்தை வெளிப்படுத்தினர். 18 முதல் 30 வயதுக்குள் எந்த ஊசியும் போடாமல் இருப்பவர்களுக்கு இதுகுறித்து அதிக பயம் ஏற்பட்டது.

நாங்கள் இறந்துவிட்டால் எங்கள் குழந்தைகளை யார் பார்ப்பது எனப் பெற்றோர்களும், பேரப் பிள்ளைகளைத் தனியாக கவனித்து வரும் முதியவர்களும் பயப்படுவார்கள். சில இடங்களில் வாக்குவாதம் கூட ஏற்பட்டது. 'எங்களுக்குத் தெரியும், ஊசி போடாதீர்கள்' என்பார்கள். சிலர் கோபப்படுவார்கள். எங்களால்தான் நோய் வருகிறது என்பார்கள்.

அவர்களுக்குள்ளேயே இருப்பவர்கள் தவறான தகவல்கள் அளித்தால் பயப்படுவார்கள். நடிகர் விவேக்கின் மரணத்திற்குப் பிறகு தடுப்பூசி குறித்த அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது. கரோனா பரிசோதனை எடுக்க வரும் வாகனங்களைப் பார்த்தாலே ஓடிவிடுவார்கள். எங்களுடைய வாகனத்தில் மருத்துவர், செவிலியர், கிராமத்திற்கு உதவி செய்யும் ஒருங்கிணைப்பாளர், அங்கன்வாடி ஊழியர், கிராம சுகாதார செவிலியர்களை உடன் அழைத்துச் செல்வோம். எங்களுடைய வாகனத்தில் சென்றால் தடுப்பூசி செலுத்திக்கொள்வார்கள்.

கோத்தகிரி கிராமத்தில், 10 கி.மீ. நடந்துசென்று தடுப்பூசி செலுத்தினோம். இரவில் திரும்பும்போது யானைகள் வரும், எனவே, ஒரு மணி நேரம் காத்திருந்து பின் ஊர் திரும்பினோம். தடுப்பூசி பற்றாக்குறை இருக்கும்போது அதே கிராமத்திற்கு மீண்டும் கஷ்டப்பட்டு வந்து செலுத்த வேண்டியிருக்கும்.

பழங்குடிகளுள் 200-300 பேர் இரண்டாம் தவணை செலுத்தியிருப்பர். இரண்டாம் தவணை செலுத்த இன்னும் நாட்களை நீட்டித்திருப்பதால், இரண்டாவது தவணையையும் வெற்றிகரமாக செலுத்திவிடுவோம்" என்றார்.

அதே அமைப்பைச் சேர்ந்த புஷ்பகுமார் கூறுகையில், "தடுப்பூசி செலுத்தும் கிராமங்களில் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக இரவு அங்கேயே தங்கிவிட்டுத்தான் திரும்புகிறோம். இரவு, பகலாகப் பணிபுரிந்துதான் இதைச் சாத்தியமாக்க முடிந்தது.

ஆரம்பத்தில், தடுப்பூசி செலுத்த சுகாதாரத் துறையினர் சென்றால் கோபம் அடைவார்கள். முதல் நாளில் அரசு சார்பாகச் செல்வார்கள். பின்னர் நாங்கள் செல்வோம். அடுத்த நாள் முகாம் நடக்கும். இப்படி ஒரு கிராமத்தில் தடுப்பூசி செலுத்த மூன்று நாட்களாகும்.

தெங்குமரஹடாவில் சாலை வசதி கிடையாது. இரு ஆறுகளைத் தாண்டினால்தான் செல்ல முடியும். இடையில் ஆற்றில் எங்கள் வாகனம் மாட்டிவிட்டது. பின், 17 கி.மீ. சுற்றிச் சென்றோம். காலையில் கிளம்பி மாலை 5 மணிக்குத்தான் அந்த கிராமத்தை அடைந்தோம். அது ஒரு தனித்தீவு மாதிரி. இரு நாள்கள் தங்கி முகாம் நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தினோம்" என்றார்.

நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான தெங்குமரஹடாவுக்குச் செல்ல மேட்டுப்பாளையத்திலிருந்து சத்தியமங்கலம் வழியாக பவானி சாகர் சென்று, அங்கிருந்து சுமார் 25 கி.மீ. அடர்ந்த வனப்பகுதி வழியாகப் பயணிக்க வேண்டும்.

அடர்ந்த வனத்துக்குள் பயணிக்கும் பேருந்துகள் தெங்குமரஹடா கிராமத்துக்குள் நுழைய முடியாத அளவுக்கு இடையில், கல்லாம்பாளையம் வழியாக ஓடும் மாயாறு குறுக்கிடுவதால் ஆற்றுக்கு முன்பாகவே பேருந்து நிறுத்தப்பட்டுவிடும்.

தண்ணீர் வரத்து குறைவாக இருந்தால் மட்டுமே பரிசல் மூலமாக மக்கள் கிராமத்துக்குள் நுழைகின்றனர். இங்கு கரோனா முதல் அலையில், யாரும் பாதிக்காத நிலையில், இரண்டாம் அலையில் 25 பேர் பாதிக்கப்பட்டனர்.

இங்குள்ள பழங்குடிகளுக்கு தினமும் வெப்பப் பரிசோதனை மேற்கொள்வது, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கோத்தகிரிக்கு சிகிச்சைக்கு அனுப்புவது, கரோனா தடுப்பூசி செலுத்துவது என தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டவர், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண் பிரசாத்.

தெங்குமரஹடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரவு, பகலாக, பரிசலில் பயணித்து அங்குள்ள பழங்குடிகளுக்குத் தடுப்பூசி செலுத்தியுள்ளார். அவருடைய பணியைப் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

சிறுமி ஒருவருக்கு வெப்பப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் அருண் பிரசாத்.

இப்படிக் களத்தில் நின்ற பல்வேறு தரப்பினரால், இன்று நீலகிரி மாவட்டம் தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் முன்மாதிரியாகத் திகழ்கிறது.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x