

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. பத்திரிகைகள், ஊடகங்கள் அதுகுறித்து எழுதுவதோ, போடுவதோ இல்லை. சில பேரிடம் சசிகலா பேசினால் பெரிதாகப் போடுகிறீர்கள் என்று சசிகலாவின் தொலைபேசி பேச்சு குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி கோபமாக பதில் அளித்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம், மேற்கு மண்டலத்தில் பங்களிப்பு வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை முதல்வராக்கியதாக சசிகலா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நீங்கள் ஏமாற்றி விட்டதாகக் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குக் கோபப்பட்ட பழனிசாமி, நாட்டில் இதுதான் பிரச்சினையா என்று பதில் கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்:
“சசிகலா இன்றைக்கு அதிமுகவில் இல்லை. ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன். ஊடகங்கள், பத்திரிகை நண்பர்கள் அதைப் பெரிதுபடுத்துகிறீர்கள். எவ்வளவோ செய்திகள் உள்ளன. அதையெல்லாம் போடுவதில்லை. இன்றைக்குத் தடுப்பூசி இல்லை. அதை எந்த ஊடகத்தில் போடுகிறீர்கள்? பத்திரிகையில் போடுகிறீர்கள். மக்களுடைய பிரச்சினைகள் நிறைய உள்ளன. எதையாவது ஊடகத்தில் காட்டுகிறீர்களா? பத்திரிகைகளில் போடுகிறீர்களா?
ஒன்றரைக் கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம் அதிமுக. அதில் சில பேரிடம் சசிகலா போன் பேசுகிறார். அதை தினந்தோறும் ஊடகத்தில் போடுகிறீர்கள். பத்திரிகையில் எழுதுகிறீர்கள். அதுதான் தினமும் நடக்கிறது. அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் அதிமுகவில் உறுப்பினராக இல்லை. அதனால் 10 பேர் என்ன, ஓராயிரம் பேரிடம் பேசினால்கூட அதுபற்றி எங்களுக்குக் கவலை இல்லை”.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.