

நீட் தேர்வு விவகாரத்தில் தெரிந்தே தமிழக மக்களை ஏமாற்றும் வேலையை இந்த அரசு செய்து கொண்டுவருகிறது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நீட் வேண்டுமா, வேண்டாமா என்பதில் வேண்டாம் என்பதே அதிமுக, திமுக என்ற கட்சிகளின் நிலைப்பாடு. நாம் விரும்பாவிட்டாலும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்தியா முழுவதும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இதனை எதிர்த்து அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மத்திய அரசு நீட் தேர்வைத் திரும்பப் பெற வேண்டும். அல்லது விருப்பப்படும் மாநிலங்கள் நடைமுறைப்படுத்தலாம் என்று நாடாளுமன்றத்தால் திரும்பப் பெறவேண்டும்.
இதைத்தான் அன்று அதிமுக அரசு, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் சொன்னது. அதற்கு ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இச்சட்டத்தை நீக்குவோம் என்றார். உங்கள் திட்டத்தைச் சொல்லுங்கள் என்றேன். அதற்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. நீட்டை விலக்குகிறேன் என்று சொல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு கொடுக்கும் பரிந்துரை மூலம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லுபடியாகாமல் செய்ய முடியுமா என்பதை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் விளக்க வேண்டும்.
தெரிந்தே தமிழக மக்களை ஏமாற்றும் வேலையை இந்த அரசு செய்து கொண்டுவருகிறது. 2006-ம் ஆண்டு நுழைவுத் தேர்வை திமுக அரசு நீக்கியது. இந்து நாளிதழில் வந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் பேசுகிறேன். அதன்பின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் 2007 முதல் 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 74 . சராசரியாக ஆண்டுக்கு 7 பேர். மொத்த இடங்களில் ஒரு சதவீதத்திற்கும் கீழ்தான் சேர்ந்துள்ளனர்.
2019- 2020ஆம் ஆண்டில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 9 பேர் . நீட் தேர்வு இல்லாதபோது 10 ஆண்டுகளில் 74 பேர் மட்டுமே சேர்ந்தனர். நீட் தேர்வு வந்தபின்பு 2 ஆண்டுகளில் 9 பேர் சேர்ந்தனர். இந்த சூழலில் அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அதிமுக அரசு குழுவை அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் என்று தெரிவித்தது. அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்தால் அந்த இடத்தை முழுமையாக எடுத்துக்கொள்வார்கள் என்று அதிமுக அரசு ஏற்காமல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீத இடங்களை ஒதுக்கியது.
இந்த ஒதுக்கீட்டால் 450 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 550 மாணவர்கள் சேரமுடியும். நீட் இருந்தால்தான் இந்த இட ஒதுக்கீடு செல்லும். நீட் இல்லாவிட்டால் இந்த இட ஒதுக்கீடு செல்லுபடி ஆகாது. 39 எம்.பி.க்கள் மூலம் போராடி நீட்டை ரத்து செய்யப் போராடலாம். . இன்னொரு ஆபத்தான முடிவை இந்த அரசு செயல்படுத்த முடிவெடுத்து இருப்பதாக அறிகிறோம். இந்த இட ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தான். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரப்படும் என்று அறிவிக்க இருப்பதாக அறிகிறோம்.
அப்படிச் செய்தால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்காது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது கிராமப்புற மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் அளித்தது. இதனை அதிமுக அரசு சிறப்பு மதிப்பெண்ணாக உயர்த்தி அளித்தது. இதை உயர்நீதிமன்றம் செல்லாது என அறிவித்தது. அதே தவறை இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக செய்தால் மொத்தமாக இந்த இடஒதுக்கீடு இல்லாமல் செய்துவிட வாய்ப்புள்ளது. குழு அமைத்து ஆராய உச்ச நீதிமன்ற அனுமதி பெற்றுள்ளீர்களா என்று நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. சொன்ன வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றப் போவதில்லை. நீட் தேர்வை நீக்குவோம் என்று கூறி இந்த அரசு மாணவர்களைக் குழப்பவேண்டாம்''.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.