புதுச்சேரியில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 15 வரை நீட்டிப்பு: கோயில்கள், கடற்கரைச் சாலை, பூங்காக்களை இரவு 9 மணி வரை திறக்க அனுமதி

புதுச்சேரியில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 15 வரை நீட்டிப்பு: கோயில்கள், கடற்கரைச் சாலை, பூங்காக்களை இரவு 9 மணி வரை திறக்க அனுமதி
Updated on
2 min read

புதுச்சேரியில் கரோனா ஊரடங்கு நாளை முதல் வரும் ஜூலை 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய தளர்வுகளாகக் கோயில்கள், கடற்கரைச் சாலை, பூங்காக்களை இரவு 9 மணி வரை திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஏப்.24-ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கரோனா ஊரடங்கு தளர்வு இன்று இரவுடன் முடிவடைவதால் நாளை முதல் வரும் ஜூலை 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தளர்வு விவரம்

புதுச்சேரியில் அனைத்துத் திரையரங்குகள், மல்டி காம்ப்ளக்ஸ்களைத் திறக்க அனுமதி இல்லை. சமூக, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பாக மக்கள் ஒன்றுகூடுதலுக்கும் தடை தொடர்கிறது. அனைத்து அரசு அலுவலகங்களும் வழிகாட்டு வழிமுறைகளுடன் இயங்கும். 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதை அனைத்துத் துறையினரும் உறுதிப்படுத்தவேண்டும்.

அனைத்து வணிகக் கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கலாம். காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கலாம். அதேபோல் தனியார் நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். ஊழியர்கள் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதேபோல் ஓட்டல்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்படலாம். அதேபோல் தேநீர்க் கடைகள், ஜூஸ் கடைகளும் கரோனா வழிமுறையைப் பின்பற்றி இரவு 9 மணி வரை செயல்படலாம். அதேபோல் மதுபானக் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். மாநில எல்லைகளில் உள்ள கடைகளில் நெரிசல் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸாரும், கலால் துறையினரும் மேற்கொள்வர். புதுச்சேரிக்குள் மது வகைகளை வீடுகளுக்குக் கொண்டுசென்று தரும் திட்டம் மூலம் கடைகளில் நெரிசல் குறையும். இதற்கான சட்ட வழிமுறைகள் உருவாக்கப்படுகின்றன.

அதேபோல் பேருந்து, ஆட்டோ, டாக்ஸிகள் இரவு 9 மணி வரை அனைத்து நாட்களிலும் இயங்கலாம். கடற்கரைச் சாலை, பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்படும். பூங்கா, கடற்கரைச் சாலைக்கு வருவோர் முகக்கவசம் அணிந்து வருவது அவசியம். சமூக இடைவெளியுடன் இருக்கவேண்டும். வழிபாட்டுத் தலங்கள் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்படும்.

மேலும், உடற்பயிற்சி நிலையம், யோகா பயிற்சி மையம் ஆகியவற்றையும் திறக்கலாம். 50 சதவீதப் பேருடன் பயிற்சி தரலாம். கரோனா விதிமுறைகளை மீறும் மார்க்கெட் கடைகள், வணிக நிறுவனங்கள், பார்கள், மால்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடைகள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், அங்கு பணிபுரிவோர் தடுப்பூசி போடாவிட்டால் அவை செயல்பட அனுமதி மறுக்கப்படும். திரைப்படம், தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடத்த அனுமதி தரப்படுகிறது. கரோனா வழிமுறையைப் பின்பற்றி 100 நபர்களுக்குள் படப்பிடிப்பை நடத்தலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in