Published : 30 Jun 2021 01:02 PM
Last Updated : 30 Jun 2021 01:02 PM

ஆர்டிஐயில் கேட்கப்படும் கேள்விகளுக்கு இந்தியில் பதிலளிப்பது கட்டாய இந்தித் திணிப்பே: ராமதாஸ் விமர்சனம்

சென்னை

ஆர்டிஐயில் உள்ளூர் மொழிகளில் வினா எழுப்பப்படுவதும், விடை அளிக்கப்படுவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்தியில் பதிலளிப்பது கட்டாய இந்தித் திணிப்பே தவிர வேறல்ல, அதைத் தவிர்க்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பும் ஆர்வலர்களுக்கு இந்தியில் பதில்கள் அனுப்பப்படுகின்றன. சமீபத்தில் தமிழகத்திலிருந்து ஒரு ஆர்வலர் எழுப்பிய கேள்விகளுக்கு இந்தியில் பதில் அனுப்பப்பட்டது.

அது மட்டுமல்ல, அவரது வீட்டு விலாசத்துக்கு அனுப்பப்பட்ட அந்த பதில் கடிதத்தில் அவரது வீட்டு விலாசத்தையும் இந்தியில் எழுதி அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸும் இதைக் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

“மத்திய அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள அமைப்புகளிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஆங்கிலத்தில் எழுப்பப்படும் வினாக்களுக்குக் கூட இந்தியில் பதில் அளிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

இந்தி தெரியாத, இந்தி படிக்காத மக்கள் ஆங்கிலத்தில் எழுப்பும் வினாக்களுக்கு இந்தியில் பதில் தரப்படும் போது அதை விண்ணப்பதாரர்களால் படித்து அறிந்துகொள்ள முடிவதில்லை. அதனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கமே சிதைக்கப்படுகிறது.

இவை அனைத்தையும் விட உள்ளூர் மொழிகளில் வினா எழுப்பப்படுவதும், விடை அளிக்கப்படுவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்தியில் பதிலளிப்பது கட்டாய இந்தித் திணிப்பே தவிர வேறல்ல.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் உன்னதமானது. அதை இந்தித் திணிப்புக்கான கருவியாகப் பயன்படுத்தக்கூடாது. தகவல் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பப்படும் வினாக்களுக்கு அதே மொழியில் விடை தரும்படி அதிகாரிகளுக்கு அரசுகள் அறிவுறுத்த வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x