Published : 30 Jun 2021 03:13 AM
Last Updated : 30 Jun 2021 03:13 AM

இந்தியா மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்தால் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக அது இருக்காது என்பதை உலக நாடுகளுக்கு நாம் உணர்த்த வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய நூலின் தமிழாக்கம் வெளியீட்டு விழாவில் ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி கருத்து

எஸ்.குருமூர்த்தி

சென்னை

இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தால் அது எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உலக நாடுகளுக்கு நாம் உணர்த்த வேண்டும் என்று ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழகத்தைச் சேர்ந்தவர். வெளியுறவுத் துறை செயலாளராகவும் பணியாற்றியவர். அந்த வகையில் வெளியுறவுத் துறையில் இந்தியாவுக்கு உள்ள சவால்களை ஆராய்ந்து ‘The India Way -Strategies for an Uncertain World’ என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார்.

இந்நூலின் தமிழாக்கம் ‘தமிழ் திசை’ பதிப்பகத்தின் வெளியீடாக ‘இந்திய வழி – நிச்சயமற்ற உலகுக்கான வியூகங்கள்’ எனும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இதன் வெளியீட்டு விழா இணைய வழியில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பங்கேற்று, நூலை வெளியிட, முதல் பிரதியை தமிழக அரசின் மொழிபெயர்ப்பு வல்லுநர் டாக்டர் சங்கர சரவணன் பெற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, ‘உலகின் பார்வையில் இன்றைய இந்தியா’ என்ற தலைப்பில் எஸ்.குருமூர்த்தி உரையாற்றியதாவது:

கரோனா சூழலுக்குப் பிறகு உலக அளவில்மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இவை, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட பிரம்மாண்ட மாற்றங்கள். சிந்தனைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தக நிறுவனம், உலக சுகாதாரநிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புகள் இருக்குமா? என்ற சந்தேகம்கூட ஏற்பட்டுள்ளது. நாடுகள் ஒன்றிணைந்து பேச முடியவில்லை. இதுபோன்ற நிலைமை இதுவரை நிகழ்ந்திராதது.

உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. இந்தியா மிருதுவான குணம் கொண்ட நாடு. ஜனநாயகமும், சந்தைப் பொருளாதாரமும் சேர்ந்ததுதான் இந்தியா. ஆனால், எதேச்சதிகாரமும் சந்தை பொருளாதாரமும் உடைய நாடு சீனா. 2016-ல் சீனா அடைந்த வளர்ச்சிக்கு மேற்கத்திய நாடுகள் காரணமாக இருந்தன.

ஜனநாயகம் என்றால் மேற்கத்திய நாடுகள்என்று சொல்வார்கள். ஆனால், அந்த நாடுகள்தற்போது ஜனநாயகத்தைக் கைவிட்டு, எதேச்சதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஆனால், ஜனநாயக ஒளிக்கீற்றாக இந்தியா திகழ்கிறது என்று ஆய்வுகள்தெரிவிக்கின்றன. தற்போது ஜனநாயகத்துக்குப் பெரிய மதிப்பு ஏற்பட்டு வருகிறது. நமது குணமே ஜனநாயகம்தான். இங்கு பல மதங்கள், பல வழிபாட்டு முறைகள் இருக்கலாம். ஜனநாயகம் காரணமாக நமது ஒற்றுமை பாதிக்கப்படவில்லை.

தற்போது பொருளாதாரத்தில் சீனாவுக்கு மாற்று இந்தியா என்று மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன. இதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தால், அது எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை நாம் உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டும். இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்புகள் உள்ளன. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு எஸ்.குருமூர்த்தி பேசினார்.

‘சட்டக்கதிர்’ ஆசிரியரும், வழக்கறிஞருமான டாக்டர் விஆர்எஸ் சம்பத், நூலை மதிப்புரை செய்து பேசும்போது, “இந்திய வெளியுறவுத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள், வளர்ச்சிகள் மற்றும் சாதனைகளை இந்நூல் எடுத்துரைக்கிறது. 1962-ல் இந்திய-சீனப் போர், 1965-ல் இந்திய -பாகிஸ்தான் போர், 1971-ல் கிழக்கு பாகிஸ்தான் உருவாக்கம். 1998-ல் அணுகுண்டு சோதனையால் உலகஅளவில் இந்தியாவுக்கு கிடைத்த கவுரவம் என அனைத்து விஷயங்களையும் தனக்கே உரித்தான ராஜதந்திர ரீதியில் நூலாசிரியர் விவரித்திருக்கிறார்.

இந்தியா ஒரு மடங்கு வளர்கிறது என்றால் சீனா 5 மடங்கு வளர்கிறது என்று இரு நாடுகளையும் ஒப்பீடு செய்கிறார். 1951-ல் தலாய் லாமுக்கு தஞ்சம் அளித்தது முதல் இரு நாடுகளுக்கு இடையே தோன்றிய பிரச்சினை இன்றுவரை நீடிப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்” என்று குறிப்பிட்டார்.

மொழிபெயர்ப்பு வல்லுநர் டாக்டர் சங்கரசரவணன், ‘செல்வம் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ எனும் தலைப்பில் உரையாற்றியதாவது:

உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றியதன் மூலம் கிடைத்த அனுபவங்களை இந்த நூலில் கொட்டியுள்ளார் நூலாசிரியர். பொதுவாகவே இந்திய வெளியுறவுத் துறை அதிகம் விவாதிக்கப்படுவது கிடையாது. அந்த வகையில் வெளியுறவுத் துறை குறித்தும் அதன் நுணுக்கங்கள் பற்றியும் அறிந்துகொள்ள இந்நூல் பேருதவியாக இருக்கும்.

மொழிபெயர்ப்பு நூல் என்றே தெரியாத அளவுக்கு நேரடியாக எழுதப்பட்ட நூல்போன்று உருவாக்கப்பட்டுள்ளது இந்நூல். வெளியுறவுத் துறையின் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சீனாவின் எழுச்சி, மிக நுட்பமாக ராஜதந்திர நடையில் விவரிக்கப்பட்டு இருக்கிறது. போட்டித்தேர்வு எழுதும்மாணவர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும். யுபிஎஸ்சி மெயின் தேர்வில் அறவியல்பகுதிக்கு இந்நூலில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெளியுறவுத் துறையை அறிந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்களுக்கு இந்நூல் பெரும் பொக்கிஷம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்எஸ் இன்டர்நேஷனல் லைவ் இயக்குநரும், நாடக ஆசிரியருமான இளங்கோ குமணன், ‘ஓர் எளிய மனிதனின் புரிதல்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

வெளியுறவுத் துறை தொடர்பாக வந்துள்ளஇந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நூல் எளிய நடையில் வந்திருப்பது சிறப்பு. இது தமிழை உயர்த்திப் பிடிக்கிறது. நூலாசிரியர் திருக்குறளோடு தனது என்னுரையை தொடங்கியிருக்கிறார். உலகமயமாக்கல் சூழலில் இந்நூல் காலத்தின் தேவை.

இரண்டாம் உலகப் போர் பாதிப்புக்குப் பிறகு, தற்போதைய கரோனா சூழல் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும், கரோனா சூழலுக்குப் பிறகு உலக நாடுகள் எடுக்கும் முடிவுகளும் மாறுபடலாம் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர்எஸ்.டி.வைஷ்ணவி, ‘இன்றைய மாணவன் நாளைய தலைவன்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

பொதுவாக, போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருளாதாரம், அரசியல் அறிவியல் தொடர்பானவற்றை படிப்பதும் கலைச்சொற்களை அறிந்துகொள்வதும் பெரிய சவால்தான். அந்த வகையில், மாணவர் சமுதாயத்துக்கு குறிப்பாக போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெளியுறவுத் துறை பற்றிய இந்த நூல் பெரிய உதவியாக இருக்கும்.

நூலாசிரியர் தனது 40 ஆண்டு கால வெளியுறவுத் துறை அனுபவத்தை தந்துள்ளார். இந்த நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் இன்றியமையாதது. ஐஎஃப்எஸ் பதவிக்குச் செல்லும்போது உலக நாடுகளின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும். இதன்மூலம் சிறந்த அனுபவத்தைப் பெற முடியும்.

இவ்வாறு எஸ்.டி.வைஷ்ணவி கூறினார்.

முன்னதாக, ‘தி இந்து’ குழுமத்தின் ‘இந்து தமிழ் திசை’ - கேஎஸ்எல் மீடியா நிறுவனத்தின் தலைவர் விஜயா அருண் வரவேற்றுப் பேசியதாவது:

நாடே போற்றும் ராமானுஜர் தொடங்கிஅண்ணா, கருணாநிதி பற்றிய புத்தகங்களையும், அறிவியல், மருத்துவம், வரலாறு, பொருளாதாரம், சுயமுன்னேற்றம் என பல்வேறு துறைகள் தொடர்பான புத்தகங்களையும் தமிழ் திசை பதிப்பகம் கொண்டுவந்துள்ளது. அவற்றுக்கு வாசகர்களிடம் இருந்து தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில், நாங்கள் பெருமையுடன்கொண்டுவந்துள்ள புத்தகம்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள இந்த புத்தகம். அன்னிய நாடுகளுடன் இந்தியாவின் உறவு முறைகள், பல்வேறு காலகட்டங்களில் ராஜதந்திரத்தோடு எடுக்கப்பட்ட மாறுபாடுகள், வெளிநாடுகளுடன் நாம் வைத்துள்ள உறவு முறைகள் எவ்வாறு நம் நாட்டின் கடைசி குடிமகனின் வாழ்க்கை வரை எதிரொலிக்கிறது என்பதை எல்லாம் மிகவும்எளிமையாகவும், அதேநேரத்தில் நுணுக்கத்தோடும் வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் ஜெய்சங்கர். இவ்வாறு அவர் கூறினார்.

நிறைவாக, ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்வைக் காண தவறவிட்டவர்கள் https://www.facebook.com/hindutamilevents/videos/, https://www.youtube.com/user/tamithehindu/videos ஆகிய லிங்க்குகளில் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x