

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் லாரிகளில் நெல் மூட்டைகளை கொண்டு வந்து, கொள்முதல் நிலையப் பணியாளர்கள் துணையுடன் விற்பனை செய்வதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு, வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லை கண்காணித்து தடுக்கும் வகையில், துணை காவல் கண்காணிப்பாளர் நல்லு தலைமையிலான குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர், தஞ்சாவூர் மாவட்ட எல்லைகளில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து தஞ்சாவூருக்கு உரிய ஆவணங்கள் இன்றி நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்த 7 லாரிகளை மடக்கினர்.
இதையடுத்து 7 லாரிகளில் இருந்த 120 டன் எடையுள்ள 2 ஆயிரம் மூட்டை நெல்லை, லாரிகளுடன் பறிமுதல் செய்தனர்.
லாரி ஓட்டுநர்களான தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டி வினித் (23), மன்னார்குடி சுதாகரன் (26), சேலம் மாவட்டம் தார்வாய் சுப்பிரமணியன் (53), முரசுப்பட்டி சபாரத்தினம் (35), அரியலுார் மாவட்டம் கீழபழூர் ராஜீவ்காந்தி (27), திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கிருஷ்ணமூர்த்தி (38), தர்மபுரி மாவட்டம் இந்தூர் ஆயப்பன் (31) ஆகியோரை கைது செய்தனர்.
நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய கொண்டுவரப்பட்டனவா என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்த் துறை கூடுதல் டிஜிபி ஆபாஷ்குமார், எஸ்பி பாஸ்கர் ஆகியோர் விசாரிக்கின்றனர்.