பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி
Updated on
1 min read

டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்றுபோக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழக பேருந்துகளில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறளை தெளிவுரையுடன் பதிவுசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பேருந்திலும் வெவ்வேறு திருக்குறள் இடம்பெற்றிருக்கும். தற்போது போக்குவரத்துத் துறை ரூ.31 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

அதிமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை.

தற்போது இயக்கப்படும் பேருந்துகளில், 6,262 பேருந்துகள் சாதாரண பேருந்துகள்தான். இந்த பேருந்துகளில் பயணிக்கும் மகளிருக்கு வழங்க தனியாக புதிய டிக்கெட் தயாராகி வருகிறது. நகர பேருந்துகளுக்கு புதிய வண்ணம் பூசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 500 மின்சார பேருந்துகள், 2 ஆயிரம் சாதாரண பேருந்துகள் வாங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தளர்வுகள் அளிக்கப்பட்டதால் 27 மாவட்டங்களில் நேற்று (ஜூன் 28) இயக்கப்பட்ட பேருந்துகளில் 22 லட்சம் பேர் பயணித்துள்ளனர். முதல் நாள் என்பதால் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in