

நெசவாளர்களே ஆச்சர்யப்படும் வகையில், அடுத்த 4 மாதங்களில் கைத்தறித் துறையில் மாற்றங்கள் ஏற்படும் என்று, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
பின்னலாடை உற்பத்தி சங்கத்தினருடனான ஆய்வுக் கூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் (செய்தித்துறை), ஆர்.காந்தி (கைத்தறி மற்றும் துணிநூல் துறை),கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலத்துறை) ஆகியோர் பங்கேற்றனர்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது, "கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள பின்னலாடை உற்பத்தி சங்கத்தினருடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பின்னலாடை உற்பத்தி சங்கத்தினர், பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளனர். அதனைவிரைவில் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடையால்,சர்வதேச அளவில் நாட்டின் அந்நியசெலாவணி உயர்ந்து வருகிறது.கைத்தறி துறையை பொறுத்தவரை, நெசவாளர்களே ஆச்சர்யப்படும் வகையில், அடுத்த 4 மாதங்களில்மாற்றங்கள் ஏற்படும்" என்றார்.
செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பும், இறப்பு குறைந்து வருகிறது. கரோனா தொற்றால், திருப்பூரில்பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி குறைந்து, பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிப்புக்குள்ளான சூழ்நிலை தற்போது மாறி, ஏற்றுமதிநிறுவனங்கள் 100 சதவீதமும், உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் 33 சதவீதமும் இயங்கி வருகின்றன. அனைத்து பின்னலாடை உற்பத்தி சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலித்து அதற்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்" என்றார்.
முன்னதாக, பல்லடம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா உட்பட பல்வேறு இடங்களை பார்வையிட்டனர். திருப்பூர் குமார்நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடுகதர் கிராம தொழில் வாரியம், மத்திய கிடங்கு மற்றும் காதி கிராப்ட்அங்காடியை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். கணபதிபாளையம் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தில் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தை சேர்ந்த 60 கைத்தறி நெசவாளர்களுக்கு, கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ் ரூ. 3 ஆயிரம் மதிப்பில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான மின் மோட்டாருடன் கூடிய உபகரணங்களை அமைச்சர்கள் வழங்கினர்.
கைத்தறி மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலர் அபூர்வா, கைத்தறி, துணிநூல் துறை ஆணையர்பீலா ராஜேஷ், காதி, கதர் கிராமவாரிய முதன்மை நிர்வாக அதிகாரிபொ.சங்கர், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் த.பொன்.ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) சாகுல்ஹமீது, கைத்தறி மற்றும் துணி நூல் அலுவலர்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள், சாயஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.