வெளியூர்களுக்கு இலவச பேருந்துகள் இயக்க வாய்ப்பில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

வெளியூர்களுக்கு இலவச பேருந்துகள் இயக்க வாய்ப்பில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
Updated on
1 min read

சென்னை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப இலவசமாக பஸ் வசதி செய்ய வாய்ப்பில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் கொண்ட அமர்வில், திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் முத்துக்கிருஷ்ணன், ராஜகோபால் ஆகியோர் ஆஜராகி, 'சென்னை மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள தென் மாவட்ட மக்கள் உடமைகளை இழந்து, சொந்த ஊர்களுக்கு செல்ல வழியில்லாமல் தவிக்கின்றனர்.

அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக அரசு இலவசமாக பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டனர்.

அப்போது நீதிமன்றத்தில் இருந்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியனிடம், இது தொடர்பாக அரசிடம் தகவல் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு நீதிபதிகள் கூறினர்.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், சென்னை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப இலவசமாக பஸ் வசதி செய்ய வாய்ப்பில்லை. ஏற்கெனவே கடந்த 4 நாட்களாக சென்னை மாநகரில் அரசுப் பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பயனடைந்தனர்" என்றார்.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக ரிட்மனு தாக்கல் செய்யுமாறு திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் முத்துக்கிருஷ்ணன், ராஜகோபால் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in