அறநிலையத் துறையில் உள்ள தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

அறநிலையத் துறையில் உள்ள தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு தகவல்
Updated on
1 min read

இந்து சமய அறநிலையத் துறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கோயிலில் நடக்கும் அன்னதான திட்டம், தூய்மைப் பணிகள் மற்றும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பன குறித்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்ளிடம் அமைச்சர் கூறியதாவது:

கரோனா தொற்று காரணமாக கோயில்கள் நீண்ட நாட்கள் மூடப்பட்டு இருந்தது. தற்போது, விதிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, கடந்த ஆட்சி காலத்தில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். அவ்வாறு உண்மையிலேயே மீட்கப்பட்டு இருந்தால் அவற்றின் பட்டியலை வெளியிட வேண்டும்.

தற்போது திமுக ஆட்சியில் கோயில் நிலங்களை மீட்கும் பணி, முன்கூட்டியே அறிவித்து நடந்து வருகிறது. கடந்த 55 நாட்களில் கோயில்களுக்கு சொந்தமான 79.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.520 கோடி ஆகும்.

கோயில்களில் உள்ள திருமண மண்டபங்களில் விதிமுறைகளை பின்பற்றி திருமணங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழக கோயில்களுக்கு சொந்தமான 4 கோடி பக்கம் உள்ள ஆவணங்களை தற்போது டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, கோயில் நிலங்களில் வாடகைக்கு இருப்பவர்களின் விவரங்கள், கோயில்களின் வரவு, செலவு கணக்குகள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் வெளியிடப்படும்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் நிரந்தர பணியாளர்களாக அறிவிக்கப்படுவர்.

அறநிலையத் துறையில் 40 ஆயிரம் பேருக்கு பணி வழங்குவதற்கான விவரங்களை திரட்டி வைத்ததாகவும், தற்போது அவர்களை விடுவிக்குமாறு அறநிலையத்துறை ஆணையர் ஆணை பிறப்பித்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.

அறநிலையத் துறையில் பணியாற்றுபவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சம்தான். எனவே, இது உண்மைக்கு புறம்பான கருத்து. அவ்வாறு உண்மையிலேயே நடந்து இருந்தால் அவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in