

தாம்பரம் அருகே செம்பாக்கம் ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.இந்த ஏரியில் விஷம் கலக்கப்பட்டதா? என மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கத்தில் பெரிய ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதந்தது நேற்று தெரியவந்தது. இதுகுறித்து மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துர்நாற்றம் வீசுவதால் இறந்த மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மீன்வளத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஏரியில் மீன்கள் செத்து மிதக்க என்ன காரணம் என மீன்வளத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மீன்கள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஏரியை சிலர் சுமார் ரூ.6 லட்சம் வரை மீன் பிடிக்க ஏலம் எடுத்துள்ளனர். இதில் போட்டி கடுமையாக இருந்ததால் ஏலம் கிடைக்காதவர்கள் விஷம் கலந்து இருக்கலாம்? என்ற சந்தேகத்தை பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.
இதுகுறித்து மீன்வளத் துறையினர் கூறியதாவது:
ஏரியில் பச்சை நிற நுண் பாசிகள் உள்ளன. இந்த பாசிகளுக்கு போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால்நீரில் இருக்கும் அனைத்துஅக்சிஜனையும் உறிஞ்சிக்கொள் ளும். அப்பொழுது மீன்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் அவை இறக்கும். கடந்த சில நாட்களாக மழை பெய்ததாலும் வெயில் இல்லாததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. விஷம் கலந்திருந்தால் அனைத்து மீன்களும் இறந்திருக்கும் என்றனர்.