

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான உத்திரமேரூர் ஏரி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது. ஏற்கெனவே இந்த ஏரிக்கான நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், தற்போது ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியும் ஆக்கிரமிக்கப்படுவது அந்தப் பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரமேரூர் பகுதி மக்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் பிரதான தொழிலாககொண்டவர்கள். இந்த ஊரில் உள்ள பெரிய ஏரியானது 5,736ஏக்கர் பாசன பரப்பை கொண்டது. இதனால் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.
இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதிஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருவதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த ஏரி இதுபோல் தொடர்ஆக்கிரமிப்புக்கு உள்ளானால்ஏரிப்பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொதுப்பணித் துறையினர் உடனடியாக உத்திரமேரூர் ஏரிப்பகுதியை ஆய்வு செய்ய வேண்டும். ஏரி வரத்து கால்வாய்கள் மற்றும் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து இந்தப் பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘‘இந்த ஏரியின் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் ஏற்கெனவே மழை பெய்தால் கூடஇந்த ஏரிக்கு நீர்வரத்து போதியஅளவில் இல்லை. ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளை பலர் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளனர். நீர்பிடிப்பு பகுதியில்உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரியின் வரத்து கால்வாய்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.