

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்துசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.
உத்திரமேரூர் அருகே உள்ள களியாம்பூண்டி கிராமத்தில் உள்ள தனியார் குழந்தைகள் பாதுகாப்பகத்தில் 43 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதன் அருகிலேயே உத்திரமேரூர் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்றும், இங்குள்ள பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையிலும் இந்த மருத்துவமனையைமேம்படுத்துவது குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்க்க சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காஞ்சிபுரம் வந்தார். அவர் அப்படியேஉத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள பழைய கட்டிடங்களையும் பார்வையிட்டார். இந்தஆய்வின்போது சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், ஆட்சியர் மா.ஆர்த்தி, திமுக மாவட்டச் செயலரும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலருமான க.சுந்தர், மக்களவை உறுப்பினர் செல்வம் உட்பட பலர் உடன் இருந்தனர்.