

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் மற்றும் புதுப்பட்டினம் மீனவக் குப்பம், வாயலூர் பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்காக ரேஷன் கடைகள் அமைந்துள்ளன. இவற்றில் கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், புதுப்பட்டினம் தவிர பிற கடைகளில் விற்பனையாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் புதுப்பட்டினம் ரேஷன் கடை விற்பனையாளர், மீனவக் குப்பம் மற்றும் சதுரங்கப்பட்டினம் கடைகளை கூடுதலாக கவனிக்கும் நிலை உள்ளது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடைகளை திறக்கும்போது, கிராம மக்கள் அனைவரும் பொருட்கள் வாங்க ஒரே நேரத்தில் கூடுவதால், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, அனைத்துக் கடைகளுக்கும் விற்பனையாளரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் நூருல்லா கூறும்போது, ‘‘ஒருவிற்பனையாளர் மூன்று ரேஷன் கடைகளை கவனிப்பதால், எப்போது கடைகள் திறக்கப்படுகிறது என்றே தெரியாத நிலை உள்ளது. மேலும், கடை திறக்கும்போது ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கரோனா தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அனைத்துக் கடைகளிலும் விற்பனையாளரை நியமிக்க மாவட்ட வழங்கல் அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.