

நடப்பாண்டு மார்ச் மாதம் 3-ம் தேதியுடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் என்எல்சி இந்தியா நிறுவனம் அதன் துணை நிறுவனங்களையும் சேர்த்து ரூ.1,345 கோடியே 44 லட்சத்தை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் ஏற்பட்ட கரோனா தாக்கத்திற்கு இடையில் நான்காவது காலாண்டில் கடந்த ஆண்டை விட 51.94 சதவிகிதம் அதிக லாபத்தையும் ஈட்டியுள்ளது.
என்எல்சி இந்தியா நிறுவனகுழுமத்தின் கடந்த நிதி ஆண்டிற்கான (2020-21) தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை செயல்பாடுகளை வெளியிடுவதற்காக அந்நிறு வனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் நேற்று முன்தினம் காணொலி மூலம் நடைபெற்றது. இதில், கடந்த 2020-21-ம் நிதியாண்டில் இந்நிறுவன குழுமம் புதிய மின் திட்டங்களை செயல்படுத்தி தனது மொத்த மின் உற்பத்தி திறனை மணிக்கு 60 லட்சத்து 61ஆயிரம் யூனிட்டாக (6,061 மெகாவாட்) உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் இந்நிறுவன குழுமம்தனது சுரங்கத் திறனை ஆண்டிற்கு5 கோடியே 6 லட்சம் டன்னாகவும் அதிகரித்துள்ளது.
முந்தைய 2019-20-ம் நிதிஆண்டில் இந்நிறுவனம் மேற்கொண்ட பசுமை மின்சக்தி உற்பத்தியைவிட கடந்த 2020-21-ம் ஆண்டில் 38 சதவீதம் அதிகமாக சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.
இந்நிறுவன குழுமம் உற்பத்தி செய்யும் மின்சக்தியை மாநில மின்வாரியங்களுக்கு விற்பனை செய்து அதற்கான மின் கட்டணங்களை வசூலிக்கும் துறையில், முந்தைய ஆண்டுகளுக்கான நிலுவை தொகைகளையும் வசூல்செய்ததன் மூலம் கடந்த 2020- 21-ம் ஆண்டில் கோரப்பட்ட மின்கட்டண தொகையை விட 14 சதவீதம் அதிகமாக ரூ.11,375 கோடிவசூலிக்கப்பட்டு நிறுவன வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
துணை நிறுவனங்களுடன் சேர்ந்து இந்நிறுவனம் 2019-20-ம்நிதியாண்டில் ஈட்டிய வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தொகுப்பிற்கு முந்தைய வருவாயான ரூ.4,853 கோடியே 64 லட்சத்தை விட 2020-21-ம்ஆண்டில் 6.13 சதவீதம் அதிகமாக ரூ.5,151 கோடியே 18 லட்சத்தை ஈட்டியுள்ளது.கடந்த நிதி ஆண்டின் 4-வதுகாலாண்டில் துணை நிறுவனங்களையும் சேர்த்து இந்நிறுவனம்முந்தைய ஆண்டைவிட 51.94 சதவிகிதம் அதிகமான நிகர லாபத்தை பெற்றுள்ளது. இருப்பினும் முழு ஆண்டை பொருத்தவரையில் 2018-19-ம் ஆண்டில் ஈட்டிய நிகர லாபமான ரூ.1,452கோடியே 98 லட்சத்தை விட 7.40 சதவீதம் குறைவாக ரூ.1,345கோடியே 44 லட்சத்தை இந்நிறு வன குழுமம் ஈட்டியுள்ளது.
மொத்த வருவாயைப் பொருத்தவரையில் இந்நிறுவனம் தனது துணை நிறுவனங்களையும் சேர்த்து கடந்த 2020-21-ம் நிதியாண்டில் ரூ.11,798 கோடியே 42 லட்சத்தை ஈட்டியுள்ளது. 2019-20-ம் ஆண்டில் ஈட்டப்பட்ட மொத்த வருவாயை விட இது 1.77 சதவிகிதம் அதிகமாகும்.
இந்நிறுவனத்தின் இயக்குநர் குழு, பங்குதாரர்களுக்கு 2020-21-ம் ஆண்டிற்காக ஏற்கெனவே வழங்கியிருந்த 10 சதவிகித இடைக்கால பங்கு தொகையுடன் கூடுதலாக 15 சதவிகித இறுதி பங்குதொகையை வழங்க பரிந்துரைத்துள்ளது.
இந்த தகவலை என்எல்சி நிறுவனத்தின் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.