

இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளன தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.அய்யலுசாமி, கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் சண்முகராஜ், சேவாதள மாவட்ட தலைவர் சக்தி விநாயகம் ஆகியோர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கிய மனு: கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட செட்டிகுறிச்சி பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள 500 ஏக்கரில் பருத்தி, பாசிப்பயறு, உளுந்து, வாழை, தென்னை, எலுமிச்சை பயிர்களை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தனியார் கல்குவாரிகள் மற்றும் கிரசர் தொழிற்சாலைகள் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
கல்குவாரி மற்றும் கிரசர் ஆலைகளில் இருந்து வெளியேறும் துகள்கள் சுற்றியுள்ள விளைநிலங்களில் இருக்கும் பயிர்கள் மீது படிகிறது. இதனால் பயிர்கள் வெள்ளை நிறத்தில்காணப்படுகின்றன. செம்மண் பூமியான அப்பகுதி முழுவதும் வெள்ளை நிறத்துக்கு மாறி விட்டது. இதனால் பயிர்களில் முளைப்பு திறன்குறைந்து, மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மண்ணும் மலட்டுத்தன்மையாக மாறும்அபாயம் இருப்பதால் விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயமும் நிலவுகிறது.
எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் குழு அமைத்து செட்டிக்குறிச்சி பகுதியில்செயல்படும் கல்குவாரி மற்றும் கிரசர் ஆலைகளை ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல் கண்டறியப்பட்டால் ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.