

``கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களை சீரமைக்கவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என, அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
வடக்கு தாமரைகுளம் அருகே பழையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிஷன் அணைக்கட்டின் மூலம் 115 ஏக்கர் பரப்பு நேரடி பாசனம் பெறுகிறது. இந்த அணைக்கட்டின் கீழ்பகுதியில் 950 மீட்டர் தொலைவில் உள்ள மணக்குடி காயலில் இருந்து கடல்நீர் உட்புகுவதைத் தடுக்க, ரூ.5 கோடியே 23 லட்சம் செலவில், 60 மீட்டர் நீளத்தில், 1.40 மீட்டர் உயரத்துக்கு புதிய தடுப்பணை கட்டுவதற்கான திட்டம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் வடக்கு தாமரைக்குளம், பெருமாள்புரம், சுவாமிதோப்பு, சித்தன்குடியிருப்பு, கீழமணக்குடி மற்றும் புத்தளம் ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர், உவர் நீராகமாறுவது தடுக்கப்படும். மிஷன் அணைக்கட்டை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
அமைச்சர் கூறியதாவது:
பழையாற்றின் குறுக்கே வடக்கு தாமரைகுளம் பகுதியில்ஒரு தடுப்பணை கட்டுவதற்கு முந்தைய அரசு உத்தேசித்திருந்தது. இப்பகுதியில் விவசாய நிலங்களும், பழையாறும் ஒரே மட்டத்தில் இருப்பதால், ஆற்றில் தடுப்பணை கட்டினால் தண்ணீர் விவசாய நிலத்துக்குள் புகுந்துவிடும் நிலை உள்ளது. எனவே, தடுப்பணையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என விவசாயிகள் அப்போதுகோரியுள்ளனர். இதனடிப்படையில், தொழில்நுட்பக் குழுவினரைவரவழைத்து ஆய்வு மேற்கொண்ட பின்பு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மாவட்டத்தில் நீர் ஆதாரங்களில் கடல் நீர் உட்புகுவது பிரச்சினையாக இருக்கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை சரியாக தூர்வாரி பராமரிக்க வேண்டும். கோதையாறு வடிகால் திட்ட கிளைக் கால்வாய்களை சரிசெய்வதற்கான திட்டத்தை தயாரித்து, தமிழக முதல்வரின் ஒப்புதல் பெற்று இப்பணிகளை விரைவில் மேற்கொள்ளநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். பொதுப்பணித்துறை நீர்ஆதார அமைப்பு செயற்பொறியாளர் வசந்தி, உதவி பொறியாளர் ரமேஷ்ராஜா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.