Last Updated : 30 Jun, 2021 03:15 AM

 

Published : 30 Jun 2021 03:15 AM
Last Updated : 30 Jun 2021 03:15 AM

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்: கிடப்பில் போடப்பட்ட கால்வாய் வெட்டும் பணி

குன்னத்தூரில் கால்வாய் வெட்டப்பட்டு பணி நிறுத்தப்பட்டுள்ள பகுதி.

புதுக்கோட்டை

வெள்ளக்காலங்களில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு திருப்பி விடுவதற்காக 262 கிலோ மீட்டருக்கு கால்வாய் வெட்டும் ரூ.14 ஆயிரம் கோடியிலான காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது.

முதல்கட்டமாக இத்திட்டத்துக்கு கடந்த ஆண்டு அதிமுக அரசு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. மேலும், இத்திட்டத்துக்கென நிலங்களை அளவீடு செய்வது, கையகப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.

புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் 7 கிலோ மீட்டருக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும், இப்பகுதியில் கால்வாய் வெட்டுவதற்கு ரூ.331 கோடியில் ஒப்பந்தமும் விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குன்னத்தூரில் பிப்.21-ம் தேதி அடிக்கல் நாட்டி, கால்வாய் வெட்டும் பணியை அப்போதைய முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, குன்னத்தூர் பகுதியில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வந்தது. ஆனால், தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் கால்வாய் வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வரை பணிகள் தொடராததால், ஆட்சி மாற்றத்தால் இப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி கூறியது: காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என ஆளுநர் உரையின் வாயிலாக தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

மேலும், இத்திட்டத்துக்கு ரூ.1,000 கோடியை வரும் பட்ஜெட்டிலேயே தமிழக அரசு ஒதுக்கினால்தான் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முடியும்.

மேலும், ஏற்கெனவே, நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் கால்வாய் வெட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும். இத்தகைய நீண்டகால திட்டத்தை தொடக்கத்திலேயே கிடப்பில் போட்டுவிடாத அளவுக்கு தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விரைவில் சந்தித்து இத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு விவசாயிகள் சார்பில் வலியுறுத்த உள்ளோம் என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை மூத்த அலுவலர் கூறியது: குன்னத்தூர் பகுதியில் கால்வாய் வெட்டும் இடத்தில் பாறைகள் உள்ளன. இவற்றை உடைத்து அகற்றுவதற்கு பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.

அனுமதி கிடைத்ததும் நவீன இயந்திரங்களைக் கொண்டு பாறைகளை உடைத்து அகற்றிவிட்டு கால்வாய் வெட்டும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x