

திருச்சி ஆஸ்ட்ரோ கிளப்பைச் சேர்ந்த வானியல் ஆர்வலர்கள் இருவர் புதிதாக 3 குறுங்கோள்களை கண்டுபிடித்துள்ளனர்.
சைபீரியாவை 30.6.1908 அன்று பெரிய குறுங்கோள் ஒன்று தாக்கி மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. இதன் நினைவாக ஆண்டுதோறும் ஜூன் 30-ம் தேதி உலக குறுங்கோள்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2015-ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு மாணவர்கள் மத்தி யில் குறுங்கோள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திருச்சி கே.கே.நகர் பாரதி மெட்ரிக் பள்ளி முதல்வரும், திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் தலை வருமான பாலா பாரதி, தூய வளனார் கல்லூரி மாணவர் ஆழி.முகிலன் ஆகியோர் அண்மையில் 3 புதிய குறுங்கோள்களை கண்டு பிடித்துள்ளனர்.
இதுகுறித்து பாலா பாரதி ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: செவ்வாய் கோளுக்கும், வியாழன் கோளுக்கும் இடையே பல்வேறு அளவுகளில் நிறைய பாறை போன்ற பொருட்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இவை குறுங்கோள்கள் (Asteroids) எனப்படுகின்றன.
இவற்றில் பூமிக்கு அருகில் இருந்து இயங்கும் குறுங் கோள்களும் உண்டு. இவை பூமியின் சுற்றுவட்டப் பாதையை குறுக்கிடும்போது பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைகின்றன. அளவில் சிறிதாக இருந்தால் வளிமண்டலத்தில் உள்ள காற்றின் உராய்வினால் எரிந்து விடுகின்றன. அளவில் பெரிதாக இருந்தால், அவை முழுவதுமாக எரிவதற்கு முன்பே பூமியை அடையும்போது, அவை பூமியை தாக்குகின்றன. இவற்றை பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் (Potentially Hazardous Objects) என்போம். இவற்றை தொடர்ந்து கண்காணித்து, பூமியை தாக்கும் வாய்ப்பு இருந்தால், அது குறித்த எச்சரிக்கை விடுக்கப்படும்.
முதல் குறுங்கோளை 1801-ல் கியூசிப்பி பியாஸி என்பவர் கண்டுபிடித்து அதற்கு செரஸ் என பெயரிடப்பட்டது. இதன் பிறகு ஏராளமான குறுங்கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தக் குறுங்கோள்களைக் கண்டறியும் பணியில் நாசாவுடன் இணைந்து பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சர்வதேச குறுங்கோள் தேடல் ஒருங்கிணைப்பு (IASC) என்ற அமைப்பு ஆர்வமுடையவர்கள், மாணவர்களுக்கு பயிற்சியளித்து குறுங்கோள்களைக் கண்டுபிடிக்க உதவுகிறது.
கடந்த மாதம் நடைபெற்ற பயிற்சியில் தமிழகத்தில் இருந்து திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் அணி பங்கேற்றது. இதில் இடம்பெற்ற நானும், ஆழி.முகிலனும் இணைந்து 3 புதிய குறுங்கோள்களைக் கண்டுபிடித்துள்ளோம். இந்தக் கண்டுபிடிப்பை IASC அங்கீகரித்து BBM2101, BBM2102, BBM2103 என தற்காலிக பெயர்களை அளித் துள்ளது. தொடர்ந்து செய்யப்படும் ஆய்வில் இவற்றின் அளவு, சுற்றுப்பாதை போன்றவை கணக்கிடப்பட்டு, கண்டுபிடித் தவர்கள் பரிந்துரை செய்யும் பெயர் வைக்கப்படும்.
குறுங்கோள்கள் கண்டுபிடிப் பில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் பல்வேறு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. உலக குறுங்கோள்கள் தினத் தையொட்டி இணையவழி கருத் தரங்குக்கு இன்று(ஜூன் 30) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.