

சுருக்குமடி வலையை பயன் படுத்தி மீன்பிடிக்கும் மீனவ கிராமங் களுக்கு எதிராக தொழில் மறியல் போராட் டத்தில் ஈடுபடுவோம் என நாகை மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் ஆட்சியர் அ.அருண் தம்புராஜிடம் நேற்று நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவ கிராம பஞ்சாயத்தார் மனு அளித்தனர்.மனுவில் தெரிவித்துள்ளது: ஒருங்கிணைந்த நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் சார்பில், அரசால் தடை செய்யப்பட்ட ஸ்பீடு இன்ஜின், இரட்டைமடி வலை, சுருக்குமடி வலை ஆகியவற்றை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக பலமுறை கிராம கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் 9 கிராமங்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால், வருவாய்த் துறை, காவல் துறை, மீன்வளத் துறை அதிகாரிகள் முன்னிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாவட்ட மீனவ கிராமங்களின் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், 47 மீனவ கிராமங்கள் கலந்துகொண்டன. சுருக்குமடி வலையை பயன்படுத்தும் 9 மீனவ கிராமங்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டன. அதன்பேரில், கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் உள்ள 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க இருப்பதாக தெரிகிறது. எனவே, அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தும் படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தவறினால், சுருக்குமடி வலையை பயன்படுத்தும் கிராமங்களுக்கு எதிராக மற்ற கிராமங்கள் முதற்கட்டமாக தொழில் மறியல் போராட்டம் நடத்துவோம்.
அடுத்தக்கட்டமாக கடல் ஏறி போராட்டம் நடத்துவோம். தொடர்ந்து போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.