

திருநெல்வேலி அருகே கோபாலசமுத்திரம் பகுதியில் சோளப்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இவ்வாண்டு போதிய மகசூல் கிடைக்கும் என்று, விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல், வாழை விவசாயமே பிரதானமாக உள்ளது. சோளம், உளுந்து, கரும்பு சாகுபடியும் ஆங்காங்கே நடைபெறுகிறது. காய்கறிகளும் விளைவிக்கப்படுகிறது. சேரன்மகாதேவி அருகே கோபாலசமுத்திரம் பகுதியில் ஆண்டுதோறும் சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு சோள பயிர்கள் திரட்சியாக வளர்ந்து, தற்போது அறுவடைக்கு தயாராகவுள்ளன. நல்ல மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
சுமார் 10 ஏக்கரில் சோளம் பயிரிட்டுள்ள விவசாயி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த எஸ்.முருகன் கூறும்போது, “மூன்று மாத பயிரான சோளம் பயிரிட்டுள்ளோம். இந்த சோளம் கிலோ ரூ.27 க்குவிற்பனையாகிறது. நிலத்தை பண்படுத்துதல், களை, மருந்து, உரங்கள், விவசாய கூலி என்றெல்லாம் சாகுபடிக்கு ஆகும் செலவுகளைத் தாண்டி, இவ்வாண்டு வருமானம்கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
அறுவடைக்கு தயாராக நிற்கும் சோளக் கதிர்களை உண்பதற்காக கிளி, குருவி, மைனா, புறா போன்ற பல்வேறு வகையான பறவைகளும் காலை, மாலை வேளைகளில் இப்பகுதிகளில் முகாமிடுகின்றன. அவற்றை விரட்டுவதற்காக தகர டப்பாக்களை தட்டி ஒலி எழுப்புகின்றனர்.