Published : 29 Jun 2021 04:55 PM
Last Updated : 29 Jun 2021 04:55 PM

தமிழக சிறைச்சாலைகளில் 100% தடுப்பூசி: சிறைத்துறை தகவல்

தமிழக சிறைச்சாலைகளில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாகத் தடுப்பூசி இயக்கத்தை அதிகப்படுத்தியதால் சிறைக் கைதிகள், விசாரணைக் கைதிகள், சிறைப் பணியாளர்களுக்கு 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

''கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் சற்றும் எதிர்பாராத வகையில் அதிக தொற்று பாதிப்பினை ஏற்படுத்தியது. கடந்த மாதம் சிறைவாசிகளைவிட அதிக எண்ணிக்கையிலான சிறைப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தனர்.

ஒரு மாதத்திற்கு முன்னர் குறிப்பிட்ட ஒரு நாளில், அதிகபட்சமாக 222 சிறைப் பணியாளர்கள், 74 விசாரணை சிறைவாசிகள் மற்றும் 16 தண்டனை சிறைவாசிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தனர். கடந்த இரு மாதங்களில் 12 சிறைப் பணியாளர்கள் கரோனா தொற்றால் தங்களது விலைமதிப்பற்ற உயிரை இழந்துள்ளனர். ஆனால் அதே காலத்தில் தொற்று பாதிப்புக்குள்ளான தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் தொற்றிலிருந்து மீண்டனர் மற்றும் சிலர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையினரின் சீரிய முயற்சியினால், இன்றைய தேதியில் (28.06.2021) 37 சிறைப் பணியாளர்கள் மற்றும் 26 விசாரணை சிறைவாசிகள் மற்றும் ஒரே ஒரு தண்டனை சிறைவாசி மட்டும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

புதிதாக சிறைபடும் சிறைவாசிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்வதுடன், அறிகுறிகளுடன் உள்ள பழைய சிறைவாசிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அறிகுறிகள் உள்ள சிறைப் பணியாளர்கள், விடுப்பு முடிந்து திரும்பும் பணியாளர்கள் ஆகியோருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சிறைவாசிகள் நேர்காணல் ரத்து, சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், சிறைகளில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி உயிர்கள் காத்திட, ஒரு முறையான, நீடித்த தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முயற்சி தொடங்கப்பட்டது.

முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி கிடைக்கப் பெற்றவுடன், சிறை அலுவலர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பயந்து முன்வராத நிலையில், அவர்களுக்கு முன்மாதிரியாக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை டிஜிபி சுனில் குமார் சிங் முதலில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இந்நிலையில் டிஜிபி சுனில் குமார் சிங் கடந்த மே மாதம் 28ஆம் தேதி சிறைத்துறைத் துணைத் தலைவர்கள் மற்றும் சிறைக் கண்காணிப்பாளர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது தடுப்பூசி தொடர்பான அவர்களின் சந்தேகங்கள் மற்றும் தயக்கத்தைப் போக்கியதுடன், கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என ஊக்கப்படுத்தி, அனைத்துத் தகுதிவாய்ந்த பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகளுக்கு தடுப்பூசி செலுத்த ஏதுவாக சிறப்பு முகாம்களை நடத்திட ஏற்பாடுகள் செய்திட அறிவுரை வழங்கினார்.

டிஜிபி சுனில் குமார் சிங், தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் இதுகுறித்து எடுத்துக் கூறியதை அடுத்து தலைமைச் செயலர், இது தொடர்பாக அனைத்து உதவிகளையும் வழங்கிட உறுதியளித்துள்ளார். சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பார்ஸ் பள்ளி, புதுக்கோட்டையில் சிறப்பு தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தார். தடுப்பூசி செலுத்தப்படுவதை அதில் ஏற்படும் முன்னேற்றத்தினை டிஜிபி சுனில் குமார் சிங் தனிப்பட்ட முறையில் தினமும் மேற்பார்வையிடப்பட்டு வருகிறார்.

மேலும், கடந்த ஜூன் 11ஆம் தேதி அன்று சிறைத்துறை தலைமையகத்திற்கு அனைத்து சிறைத்துறைத் துணைத் தலைவர்கள் வரவழைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை அளிக்கவும் மற்றும் சிறைவாசிகள் மற்றும் சிறைப் பணியாளர்கள் விலைமதிப்பற்ற உயிர்களைப் பாதுகாத்திடவும் மற்றும் கரோனா தொற்றுப் பரவலை அனைத்துச் சிறைகளிலும் கட்டுப்படுத்திட ஏதுவாக தடுப்பூசி செலுத்தும் பணியினைத் துரிதப்படுத்திட சிறப்பு ஏற்பாடுகள் செய்திட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இதன் பயனாக நேற்றுவரை, தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைகளிலும் உள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதிவாய்ந்த சிறைப் பணியாளர்கள் (4197) மற்றும் தகுதிவாய்ந்த தண்டனை சிறைவாசிகள் (4099) 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளனர். மேலும், 69 சதவீத விசாரணை சிறைவாசிகளுக்கும் (7616) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, இதில் 100 சதவீத தடுப்புக் காவல் சிறைவாசிகளும் அடங்குவர்.

மீதமுள்ள விசாரணை சிறைவாசிகள், புதிதாக அனுமதிக்கப்படும் சிறைவாசிகள், கரோனா தொற்றிலிருந்து மீண்டு 3 மாதங்கள் நிறைவு செய்த சிறைப் பணியாளர்கள் மற்றும் சிறைவாசிகள், மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய நபர்களுக்கு, தடுப்பூசி செலுத்திட உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள சிறை அதிகாரிகளுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x