

புதுச்சேரியில் மட்டுமே வேலையில்லா அமைச்சர்கள் உள்ளனர். இவ்விஷயத்தில் ஆளுநர் தமிழிசை தலையிட்டு அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
வெளிமாநிலங்களுக்கு இடையிலான சாலைப் போக்குவரத்துக்கு புதுச்சேரி அரசு அனுமதிக்கவில்லை. இதனால் புதுச்சேரி மக்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல புதுச்சேரியின் எல்லைப் பகுதிக்குச் செல்ல வேண்டிய நிலையுள்ளது. தமிழகப் பேருந்துகள் புதுச்சேரி எல்லை வரை வருகின்றன. அதேசமயம் புதுச்சேரிக்கு வெளி மாநிலங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதே நேரம் புதுச்சேரி மக்கள் அதிகம் பயன்பெறக்கூடிய புதுச்சேரி - விழுப்புரத்திற்கு இடையிலான பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இதுபற்றி அறிந்த புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், இன்று புதுச்சேரி ரயில்வே நிலையத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது ரயில்வே மேலாளர் பாலகிருஷ்ணனிடம் புதுச்சேரி மக்களுக்கு அளிக்கப்படும் ரயில் சேவை, புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்
புதுச்சேரி மக்கள் அதிகம் பயன்பெறக்கூடிய புதுச்சேரி- விழுப்புரம் இடையிலான பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். அதனால் கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து எம்.பி. வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரி-விழுப்புரம் பயணிகள் ரயிலை இயக்கக் கோரியுள்ளேன். அத்துடன் புதுச்சேரிக்கு சரக்கு ரயில் போக்குவரத்து சேவையைத் தொடங்கச் செய்ய வேண்டும். கடந்த காங்கிரஸ் அரசில் புதுச்சேரி துறைமுகம் எண்ணூர் துறைமுகத்துடன் சரக்குப் போக்குவரத்துக் கப்பல் சேவை தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டது. அரசியல் காரணங்களால் அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. தற்போது புதுச்சேரியிலும் மத்தியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் உள்ளது. எனவே, புதுச்சேரி அரசு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடர்பான ஒப்பந்தத்தை புதுப்பித்து உடனே தொடங்க வேண்டும்.
புதுச்சேரியில் அமைச்சர்கள் இருக்கிறார்களா? இல்லையா? எனத் தெரியவில்லை. அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், யாருக்கும் எந்தத் துறையும் பிரித்துக் கொடுக்கப்படவில்லை. புதுச்சேரி உள்ளிட்ட உலகம் முழுக்க வேலையில்லா இளைஞர்கள், தொழிலாளர்கள் இருக்கின்றனர். எங்கும் வேலையில்லா அமைச்சர்கள் இல்லை. ஆனால், புதுச்சேரியில் மட்டுமே வேலையில்லா அமைச்சர்கள் உள்ளனர். எனவே, இவ்விஷயத்தில் ஆளுநர் தமிழிசை தலையிட்டு அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்து தர வேண்டும்" என்று குறிப்பிட்டார்.