

கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகத்திற்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பெயர் வைக்கும்படி வணிகர்கள் அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாத உணவு தானியக் கிடங்கைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கோயம்பேடு உணவு தானிய வணிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் இன்று (ஜூன் 29) வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது கோயம்பேடு உணவு தானிய வணிகர் சங்கத்தின் தலைவர் த.மணிவண்ணன் சில முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தார். முதல்வருடன் கலந்து பேசி விரைவில் நல்ல முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
கோயம்பேடு உணவு தானிய வணிகர் சங்கத்தின் தலைவர் த.மணிவண்ணன் முன்வைத்த கோரிக்கைகள்:
"1. காய்கறி அங்காடி வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அப்படியே உணவு தானிய வணிக வளாகத்திற்கும் வந்து கொள்முதல் செய்ய ஏதுவாக, காலை 3 மணி முதல் உணவு தானிய வணிக வளாகம் இயங்க அனுமதிக்கும்படி வேண்டுகிறோம்.
2. குறிப்பிட்ட பொருளை குறிப்பிடப்பட்டிருக்கும் வளாகத்திற்குள்தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற Tamil Nadu Specified Commodities Market Act சட்டத்திற்கு கட்டுப்படாமல், காய்கறி மற்றும் கனி அங்காடி வளாகங்களுக்குள் சட்டவிரோதமாக இயங்கும் உணவு தானிய வியாபாரத்தைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
3. கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாத உணவு தானியக் கிடங்கைத் தமிழக அரசே நடத்த முடிவெடுத்து, உடனடியாக அதனை உபயோகத்திற்குக் கொண்டுவர வேண்டுகிறோம்.
4. உணவு தானிய வணிக வளாகத்திற்குள் இருக்கும் வாகனங்கள் நிறுத்துமிடத்தை உணவு தானிய வணிகர்கள் மற்றும் வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டுகிறோம்.
5. உணவு தானிய வணிக வளாகத்தின் அத்தியாவசியப் பிரச்சினையான, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத தண்ணீர் பிரச்சினைக்குப் புதிய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டுகிறோம்.
6. வளாகத்தில் உள்ள B Type அங்காடிகளுக்கு கழிவறை வசதி அமைத்துத் தர வேண்டுகிறோம்.
7. அந்நியர்கள் ஆட்சி செய்து அழிச்சாட்டியம் செய்த காலத்திலேயே சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கி, தமிழர்களின் வணிகப் பெருமையை இந்திய வரலாற்றில் பதிவு செய்த 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி.யின் பெயரை கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகத்திற்குச் சூட்ட புதிய அரசு ஆவன செய்யும்படி வேண்டுகிறோம்.
முந்தைய ஆட்சியில் இதனைப் பலமுறை வலியுறுத்தியும் நிறைவேற்றவில்லை. புதிய அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. காரணம்... காய்கறி வணிக வளாகத்திற்குப் பெரியார் பெயரையும், கனி அங்காடி வளாகத்திற்கு அண்ணா பெயரையும், மலர் அங்காடி வளாகத்திற்கு காமராஜர் பெயரையும் சூட்டி அழகு பார்த்தவர் கருணாநிதி.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, உரிய நடவடிக்கைகள் எடுத்து, நிறைவேற்றிக் கொடுக்கும்படி அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறோம்".
இவ்வாறு கோயம்பேடு உணவு தானிய வணிகர் சங்கத்தின் தலைவர் த.மணிவண்ணன் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.