Last Updated : 29 Jun, 2021 12:06 PM

 

Published : 29 Jun 2021 12:06 PM
Last Updated : 29 Jun 2021 12:06 PM

பதவியேற்பில் இந்திய ஒன்றிய அரசு என்று ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டது புதுச்சேரியைத்தான்; மத்திய அரசை அல்ல: ராஜ்நிவாஸ் விளக்கம்

அமைச்சர்கள் பதவியேற்பில் இந்திய ஒன்றிய அரசு என்று ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டது புதுச்சேரியைத்தான், மத்திய அரசை அல்ல என்று புதுச்சேரி ராஜ்நிவாஸ் விளக்கம் தந்துள்ளது.

புதுச்சேரியில் ஐம்பது நாட்களுக்குப் பிறகு அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அப்போது "இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பின் அமைச்சர் என்ற வகையில் கடமையாற்றுவேன்" என்று ஆளுநர் தமிழிசை வாசிக்க, அமைச்சர்கள் திரும்பக் கூறிப் பதவியேற்றனர்.

இந்திய ஒன்றியம் என்று ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டது தொடர்பாகப் பலரும் கருத்துகள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று புதுச்சேரி ராஜ்நிவாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"அரசியலமைப்புச் சட்டப்படி பல ஆண்டு காலமாக புதுச்சேரி அரசால் மரபாகப் பயன்படுத்தப்பட்ட தமிழ் உறுதிமொழிப் படிவத்தில் எந்த மாறுதலும் செய்யப்படாமல் தமிழில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இதில் இந்திய ஒன்றியம் என்ற வார்த்தை வேண்டுமென்றே திரித்துக் கூறப்படுகிறது. ஒன்றிய அரசு என்று ஆளுநர் கூறியதாகத் திரித்துக் கூறப்படுகிறது.

தமிழக அமைச்சர்கள் பதவியேற்கும்போது, தமிழக அமைச்சர்களாகப் பதவியேற்கிறோம் என்று கூறுகிறார்களோ அதேபோல் "Indian union Territory of puducherry" என்ற வாசகம் "இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பு" என மொழிபெயர்க்கப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இப்படிவம்தான் வெகுகாலமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து அதன் பின்பு இந்திய ஆட்சிக்கு உட்பட்டதால் அதை "Indian Union Territory" என்கிறார்கள். அதனால் ஒன்றியம் எனக் குறிப்பிடுவது யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத்தான். இங்கு எங்கேயும் மத்திய அரசு என்று குறிப்பிடவில்லை. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று ஆளுநர் கூறியதாகத் திரித்துக் கூறுகின்றனர்.

புதுச்சேரி இந்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கும் நிலப்பரப்பு. அதனால்தான் இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பு என்று கூறுகிறோம். மாநில அரசுகளின் பதவியேற்பு படிவத்தில் மத்திய அரசு என்ற வார்த்தை இடம் பெறாது. அவ்வாறு இருக்கையில், புதுச்சேரியில் மட்டும் ஒன்றிய அரசு என்று சொல்லப்பட்டது என்று கூறுவது உள்நோக்கம் உடையது. தமிழ் மண்ணில் தமிழில் பதவியேற்ற பெருமையை நிலைநிறுத்த வேண்டும். அதனால் அதன் மாண்பை மறைக்கும் அளவுக்குத் தவறாக இந்த ஒன்றியம் என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது. சில தேவையற்ற சலசலப்புகளால் பலரது தியாகத்தால் உருவான பலமான இந்திய இறையாண்மையைக் குலைக்க முயல வேண்டாம்".

இவ்வாறு புதுச்சேரி ராஜ்நிவாஸ் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x