

நீட் பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து பாஜக நீதிமன்றம் சென்றுள்ளது அதன் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. நீட் ரத்து செய்யப்பட வேண்டும் என தினசரி கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிசாமி, தனது கூட்டணிக் கட்சியின் நிலைப்பாட்டை வைத்து என்ன முடிவெடுக்கப்போகிறார், அவரது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
“அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்று பாஜக தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அதற்கு நேர்மாறாக பாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவரே நீட் சம்பந்தமாக, ஏ.கே.ராஜன் கமிட்டியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது பாஜகவின் இரட்டை நடவடிக்கைகளை உலகுக்கு உணர்த்தியுள்ளது.
தமிழக மக்கள் மேல் அக்கட்சி எந்த வகையிலான உணர்வினைக் கொண்டிருக்கிறது, இந்த மக்களை அவர்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பது வெளிவந்துவிட்டது. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதைப் போல இன்றைக்கு பாஜக தங்கள் முழு சுயரூபத்தை வெளியில் காட்டியுள்ளது.
அதிமுகவும் இதில் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். தோழமைக் கட்சியான பாஜக நீட் பாதிப்புகள் குறித்து ஆராயப் போடப்பட்ட குழுவையே எதிர்த்து நீதிமன்றம் செல்லும் முடிவை எடுத்துச் செயல்பட்டிருக்கும்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தினசரி கேட்டுக்கொண்டிருக்கிறார். அறிக்கை மூலம் நீட் உண்டா இல்லையா, நீட் உண்டா இல்லையா என தினசரி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அப்படி இருக்கும்போது நீட்டுக்கு எதிரான பாஜகவின் இத்தகைய நடவடிக்கைகளை அவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார், இதன் மூலம் அவர்கள் தோழமையை எப்படி உறுதிப்படுத்தப் போகிறார் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தெளிவுபடுத்த வேண்டும்.
இன்றைக்கு நீட் தேர்வினால் ஏழை எளிய மக்களுக்கான பாதிப்புகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. வசதியற்ற மாணவர்கள் அந்தப் பயிற்சி மையங்களுக்குப் போக முடியாத சூழல் உள்ளது. இப்படிப் பல்வேறு நிலைகளில் தமிழகத்தின் மாணவ சமுதாயத்தைக் காக்கவும், பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும், முதல்வர் இந்தக் குழுவை அமைத்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்.
அதைக் குழிதோண்டி புதைக்கும் விதத்தில் அவர்களுடைய நடவடிக்கைகளை இன்றைக்கு வெளிப்படுத்தியுள்ளனர். எனவே பாஜகவும் அதன் தோழமைக் கட்சியான அதிமுகவும் நீட் சம்பந்தமான தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்”.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.