Published : 29 Jun 2021 11:03 AM
Last Updated : 29 Jun 2021 11:03 AM

தளர்வுகளில் அலட்சியம் காட்டினால் டெல்டா பிளஸ் பரவ வாய்ப்பு; மீண்டும் ஊரடங்கு வரும்: விஜயகாந்த் எச்சரிக்கை

ஊரடங்கு தளர்வுகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறினால் டெல்டா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது. இதனால் நோய்த்தொற்று அதிகரிக்கும். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஊரடங்கு தளர்வுகளை எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டி விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“ஊரடங்கு உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், முகக்கவசம் அணிந்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் அலட்சியம் காட்டினால் கரோனா மூன்றாவது அலை, டெல்டா பிளஸ், கருப்புப் பூஞ்சை போன்ற தொற்று நோய்கள் அதிக அளவில் பரவி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஊரடங்கு தளர்வை மக்கள் நன்கு புரிந்துகொண்டு பாதுகாப்புடன் இருப்பதுடன் அனைவரையும் பாதுகாத்திட வேண்டும். மக்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து டெல்டா போன்ற வைரஸ் தொற்று பரவாமல் தவிர்க்க ஒவ்வொருவரும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். போதிய தடுப்பூசிகள் இன்றி மக்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தளர்வுகளில் அலட்சியம் காட்டினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிர்ச் சேதம் ஏற்படுவதுடன், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தொழில் முடங்கி, வேலை வாய்ப்பின்றி வருமானம் இழந்து மிகப்பெரிய ஒரு பிரச்சினையை மக்கள் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படக்கூடும். எனவே, தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதுவே வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது”.

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x