Published : 29 Jun 2021 06:11 AM
Last Updated : 29 Jun 2021 06:11 AM

கரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சிறு மற்றும் குறு தொழிலை மீட்டெடுக்க தொழில் நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசு செயல்படும்: ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி

கரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சிறு மற்றும் குறு தொழிலை மீட்டெடுக்க தொழில் நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசு செயல்படும் என்று ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் (MSME) தினமாக ஜூன் 27 -ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டும், கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு சிறு மற்றும் குறு தொழில்களை மீட்டெடுக்கும் வகையிலும், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘சிறு மற்றும் குறு தொழிலை மீட்டெடுப்போம்’ என்ற சிறப்பு நிகழ்வு கடந்த ஞாயிறன்று இணையவழியில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியை தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தொழில் துறையைச் சேர்ந்த கருத்தாளர்கள் பேசிய தாவது:

அமைச்சர் தா.மோ.அன்பரசன்: உலகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் பங்காற்றுகின்றன. இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்களை மீட்டெடுப்போம் என்ற நோக்கில் இந்த இணையவழி நிகழ்ச்சியை நடத்தும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு தமிழக அரசு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்து,சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறைதான் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்து வருகிறது. தமிழகத்தில் 23 லட்சத்து 60 ஆயிரம் தொழில் நிறுவனங்கள், ரூ.2 லட்சத்து 73 ஆயிரம் கோடி முதலீட்டில்தொடங்கப்பட்டு, 1 கோடியே 52 லட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, நாட்டிலேயே 3-வது மாநிலமாகத் திகழ்கிறது.

முதலீட்டு மானியம் வழங்க அரசாணை

கரோனா பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட சிறு, குறு நிறுவனங்களை மீட்டெடுக்க, அவற்றுக்கு முதலீட்டு மானியம் வழங்க இந்த ஆண்டில் ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 60 சதவீத தொகையான ரூ.168 கோடி விடுவிக்க அரசாணை வெளியிடப்பட்டு, 80 சதவீதம் அதாவது 1,399 நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் நீடித்த வளர்ச்சியைப் பெறுவதற்கு ஏதுவான வகையில் பல சிறப்புத் திட்டங்களை அரசு உருவாக்க உள்ளது. மேலும், பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து சிறு மற்றும் குறு தொழிலை மீட்டெடுக்க தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு இணைந்து செயல்படும்.

தமிழக அரசின் சிறு, குறுதொழில் முனைவோர் செயலாளர் வி.அருண்ராய், ஐஏஎஸ்: கரோனாதொற்றால் பாதிப்படைந்துள்ள சிறு, குறு தொழில்கள் மீண்டும் செயல்படுவதற்கான நடவடிக்கையாக, அவர்களது ஆலோசனைகளைப் பெற்று, விவாதித்து சிறப்பான திட்டங்களை முன்னெடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது. சிறு, குறு தொழில்களை விரைவாகமீண்டும் செயல்பாட்டு நிலைக்குக் கொண்டுவர, விரைவில் நல்ல பல அறிவிப்புகளை முதல்வர் வெளியிட இருக்கிறார்.

குளோபல் சர்வீசஸ் பி.லிட். நிறுவனர், பட்டய கணக்காளர் சிஏ ஜி.கார்த்திகேயன்: நாடு முழுவதும் 6.5 கோடி சிறு மற்றும் குறுதொழில் முனைவோர் உள்ளனர். இந்திய நாட்டின் முதுகெலும்பாக இருந்த சிறு, குறுதொழில்கள் இந்த கரோனா காலத்தில் பெரும்பாதிப்பைச் சந்தித்துள்ளன. மத்திய அரசின்சிறு தொழில்களுக்கான சலுகைகளைச் சில மாநிலங்களே அதிகளவில் பெற்று பயனடைந்துள்ளன. மத்திய / மாநில அரசுகள்விரைந்து செயல்பட்டு, அனைத்து சிறுதொழில் முனைவோர்களும் மீண்டெழும் வகையிலான திட்டங்களைச் செயல்படுத்துவதோடு, அனைவருக்கும் அந்தத் திட்டங்கள் சென்றடைவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம்.

கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு: கரோனா பாதிப்பிலிருந்து சிறு மற்றும் குறு தொழில்களை மீட்டெடுக்க தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியாகநம்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு முதல்வர்தலைமையில் நடைபெற்றஆலோசனைக் கூட்டத்தில்தமிழக தொழில்துறை அமைச்சர் மற்றும் ஊரகத்தொழில் துறை அமைச்சர்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொடிசியா மூலமாக நாங்கள் முன்வைத்த நல்ல பலஆலோசனைகளை ஏற்றுக் கொண்டதோடு, அவற்றை நிறைவேற்றும் வகையில் உடனடியாக அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்கள். இது எங்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது.

சென்னை கிஸ்ஃப்ளோ தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் சம்பந்தம்: இந்தியாவில் சிறு, குறு தொழில் முனைவோர்களே அதிகளவில் உள்ளனர். கரோனா பாதிப்புக்கு முன்புவரை இந்திய அளவிலான ஏற்றுமதியில் சிறு, குறு தொழில்கள் 48 சதவீத பங்களிப்பைச் செய்து வந்தன. மேலும், 12 கோடிபேருக்கான வேலைவாய்ப்புகளையும் வழங்கி வந்தது. பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவி, மூலப் பொருட்களின் விலை குறைப்பு, விற்பனை வரி, வருமான வரி ஆகியவற்றில் சிறப்பு சலுகைகளை வழங்கினால், நிச்சயம் மீண்டும் சிறு தொழில்கள் புத்துணர்வு பெறும் என்று நம்பலாம்.

இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த நேட்டிவ்லீட் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகஅதிகாரி சிவராஜ் ராமநாதன்: கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகளில் சிறு மற்றும் குறு தொழில்கள்பற்றி யாரும் கவனிக்காமல் இருக்கிறார்களே என்ற கவலை இருந்தது. இந்த நிகழ்வு, அந்த நிலை மாறும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. சிறு, குறு தொழில்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்களைக் கவனத்தில் கொண்டு, அதிலிருந்து அவற்றை கைதூக்கிவிடும் முயற்சியில் மத்திய அரசும், மாநில அரசும் ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்த நிகழ்வில், சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் எழுப்பிய பல்வேறுகேள்விகளுக்கும் கருத்தாளர்கள் பதிலளித்தனர். நிறைவாக, ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நன்றி கூறினார்.

இந்த நிகழ்வை ட்ரைடன் இன்ஜினீயரிங், ட்ரைடன் பம்ப்ஸ், வசந்தி பம்ப்ஸ், டிசார்ப்பம்ப்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஒன்றிணைந்து வழங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x