

கரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசிக்கு மாற்று ஏதும் இல்லை என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்தார்.
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில், நீதிக்கரங்கள் அமைப்பு, தமிழ்நாடு மூத்த வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களின் கிளார்க்குகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான கரோனா தடுப்பூசி முகாம் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சில் அரங்கில் நேற்று நடந்தது. முகாமை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தொடங்கி வைத்தார். முதல் தடுப்பூசியை பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் போட்டுக்கொண்டார். இதில் பங்கேற்றோர் பேசியதாவது:
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி: கரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசிக்கு மாற்று ஏதும் இல்லை. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இந்த முகாமை வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மூத்த நீதிபதி என்.கிருபாகரன்: கரோனா காரணமாக வருமானம் இழந்துள்ள இளம் வழக்கறிஞர்கள், இறந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவ வேண்டும்.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழகம் முழுவதும் உள்ள 97,382 வழக்கறிஞர்களுக்கும் தடுப்பூசி போடும் வகையில் இந்த முகாம் முதன்முதலாக இங்கு தொடங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், கட்டுமானதொழிலாளர் என பல்வேறு பிரிவினருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட கிராமமாக திருவாரூர் மாவட்டம் காட்டூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது தாய் அஞ்சுகம் அம்மாள் நினைவிடங்கள் அங்குதான் உள்ளன. 90 ஆயிரம் பேர் போட்டுக் கொண்டதன் மூலம், தடுப்பூசி அதிகம் பேர் செலுத்திய முதல் தொகுதியாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி விளங்குகிறது. அதற்கு உதயநிதி ஸ்டாலினின் முயற்சிதான் காரணம்.
உதயநிதி ஸ்டாலின்: தமிழகத்தில் 1.41 கோடி டோஸ் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எஞ்சிய அனைவருக்கும் தடுப்பூசிவழங்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், அமைச்சர் சேகர்பாபு, எம்.பி.க்கள் பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, பார் கவுன்சில் துணைத் தலைவர் வேணு.கார்த்திகேயன், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜாகுமார் நன்றி கூறினார்.