

தமிழகத்தில் டெல்டா பிளஸ் வகைகரோனா தொற்றால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கிய 50 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா தொற்றுபாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. ஆனாலும், பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்புபோட்டு கைகளை கழுவ வேண்டும். தேவையில்லாமல் வெளியேவருவதை தவிர்க்க வேண்டும்.
ரோட்டரி சங்கம் கடந்த ஒன்றரைமாதத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் ஜெனரேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அரசுமருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது. சென்னையில் உள்ளஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்களுக்கு சங்கம் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
டெல்டா பிளஸ் வகை கரோனா வைரஸ் தொற்று கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வந்துவிட்டது. தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை எடுத்து பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில், 10 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. மதுரையை சேர்ந்த நபர் மட்டும் உயிரிழந்துள்ளார். மற்ற 9 பேரும்நலமுடன் உள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ததில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
இந்தியாவில் தயாராகும் 7 நிறுவனங்களின் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை கொள்முதல் செய்யமாநில அரசுங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசுதெரிவித்தது. எஞ்சிய 25 சதவீததடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு எவ்வளவு தடுப்பூசிகள் வந்துள்ளது, எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளன, கையிருப்பில் எவ்வளவு இருக்கிறது என்ற தகவலை தினமும் கூறி வருகிறேன்.
அனைவரும் தடுப்பூசிபோட்டுக் கொள்ள வேண்டும் எனபிரதமர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக உள்ளனர். தமிழக பாஜக தலைவர் மத்திய அரசிடம் பேசிதமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை கேட்டு பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
20 நாளில் பரிசோதனைக் கூடம்
காஞ்சிபுரம் மாவட்டம் களியாம்பூண்டியில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 43 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இக்கல்லூரிகளை அடுத்த ஆண்டு இறுதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியும் பரிசீலனையில் உள்ளது. சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனை கூடம்20 நாட்களில் அமையும்’’ என்றார்.