

தமிழகத்தில் இனிமேல் விதிமீறிய கட்டிடங்கள், மனைப் பிரிவுகளுக்கு அனுமதி கிடையாது என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
வீட்டுவசதித் துறையின் கீழ் நடந்து வரும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில், அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வீட்டுவசதி வாரியத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் காலி பணியிடங்கள், பதவி உயர்வில் கால தாமதம் உள்ளிட்டவை குறித்து 28 கோரிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஆய்வுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிவிரைவாக மேற்கொள்ளப்படும்.
முக்கிய இடங்களில் துணை நகரம் அமைக்க வேண்டும் என்பதுமுதல்வரின் எண்ணம். அதை செயல்படுத்தும் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. மாதிரி நகரங்களாக அவை உருவாக்கப்படும். தமிழகத்தில் கட்டிட அனுமதிக்கான கோப்புகள் மீது 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, பெருந்துறை உள்ளிட்ட இடங்களில் ஆட்டோமொபைல் சார்ந்த தொழில் அதிகம் உள்ளதால், அங்கு `ஆட்டோ நகரம்' அமைத்து, தேவையான வசதிகள் உருவாக்கப்படும்.
திட்ட அனுமதிக்கான சட்டத்தைமீறியதன் அடிப்படையில், பல்வேறு நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் விதிமீறல்கள் அணுகப்படும். யாரையும் பழிவாங்கும் எண்ணம்அரசுக்கு இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு, சட்டத்துக்கு உட்பட்டுஉதவி செய்வோம். இனி சட்டத்தைமீறிய கட்டிடமோ, மனைப் பிரிவோ வரக்கூடாது என்பதே அரசின் முடிவு. கட்டிட அனுமதிக்கு ஒற்றை சாளர முறையைக் கொண்டுவர உள்ளோம்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.