Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தொடர வேண்டும்: விளாத்திகுளம் அதிமுக கூட்டத்தில் தீர்மானம்

‘அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தொடர வேண்டும்’ எனதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விளாத்திகுளத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலர் வேலவன் தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், நகரச் செயலர் பொன்ராஜ் பாண்டியன், இலக்கிய அணி இணைச் செயலர்முருகன் முன்னிலை வகித்தனர்.

`அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தொடர வேண்டும். சில மாவட்டங்களில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்துக்கு மாறாக சில பேரை மட்டும் கூட்டிசசிகலாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கண்டித்தும், தொலைபேசி வாயிலாக சசிகலாவுடன் பேசுபவர்களை அதிமுகவில் இருந்து நீக்குவதற்கு கண்டனம் தெரிவித்தும்’ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடம்பூர் ராஜு மறுப்பு

இதுதொடர்பாக, அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கூறியதாவது: மக்களால் நிராகரிக்கப்பட்ட சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக் கூடாது என கடந்த 14-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர், கடந்த 18-ம் தேதி தூத்துக்குடி வடக்கு மாவட்ட கூட்டத்தில், 10 ஒன்றியச் செயலர்கள், 6 பேரூராட்சி செயலர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் கட்சியில் சேர்க்கக் கூடாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்து, கையெழுத்திட்டுள்ளனர்.

அமமுக சென்று வந்தவர்

சசிகலாவுக்கு ஆதரவாக விளாத்திகுளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அமமுகவைசேர்ந்தவர்கள். அவர்கள் அதிமுக பெயரை தவறாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்தக் கூட்டத்தை நடத்திய வேலவன் முதலில் அதிமுகவில் இருந்தார். பின்னர் அமமுக தொடங்கியவுடன் அதில் இணைந்தார். மீண்டும் அதிமுகவுக்கு வந்த அவருக்கு ஜெ. பேரவை துணைச செயலர் பதவி வழங்கப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க தலைமைக்கு வேண்டுகோள் விடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x