Published : 02 Dec 2015 11:36 AM
Last Updated : 02 Dec 2015 11:36 AM

ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த 194 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்: 1,217 மாணவர்களுக்கு மடிக்கணினி- முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

ஆர்.கே நகர் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், விலையில்லா ஸ்கூட்டர், மாணவர்களுக்கு மடிக்கணினி ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெட்ரோல் ஸ்கூட்டர்கள்

திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த 194 பெண்களுக்கு தங்கம் வழங்கப்படுகிறது. இதன் அடையாளமாக 5 பேருக்கு முதல்வர் ஜெயலலிதா திருமண நிதி மற்றும் தங்க நாணயங்களை வழங்கினார். கால்கள் பாதிக்கப் பட்ட மாற்றுத் திறனாளிகள் 6 பேருக்கு இலவச இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் முதல்வர் வழங்கினார்.

படேல் நகர், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புத்தா தெரு சென்னை மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 729 பேர், அரசு உதவிபெறும் தண்டையார்பேட்டை முருக தனுஷ்கோடி பெண்கள் பள்ளி, கொருக்குப்பேட்டை சர் தியாகராயர் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 488 பேர் என மொத்தம் 1,217 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. இதன் அடையாளமாக 5 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி இந்தப் பணியை முதல்வர் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, கைத்தறித்துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x