

சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிபடி, கோவையில் உடற்பயிற்சி கூடத்துக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வழங்கினார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், காந்திபார்க் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அங்கு பொதுமக்கள் பயன்படுத்திவரும் உடற்பயிற்சி கூடத்துக்கு தேவையான உபகரணங்களை வாங்கித் தர வேண்டும் என உடற்பயிற்சி செய்வோர் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக கமல்ஹாசன் உறுதியளித்தார். இந்நிலையில், தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும், அந்த உடற் பயிற்சி கூடத்துக்கு உபகரணங்களை கமல்ஹாசன் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.பிரபு கூறும்போது, “ரூ.2.5 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்களை வாங்க கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு கமல்ஹாசன்ஆர்டர் அளித்திருந்தார். இரு தினங்களுக்கு முன் தொடர்புடைய உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் ஒப்படைக்கப்பட்டன” என்றார். கட்சியின் மாநில துணைத் தலைவர்ஆர்.தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் உடற் பயிற்சி உபகரணங்களை பார்வையிட்டனர்.