

கரோனா தொற்று பரவல் குறைவதைத் தொடர்ந்து, அரசு அறிவித்தகூடுதல் தளர்வுகள், கோவை மாவட்டத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தன. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதால், மாநகர சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்தது.
கரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில், கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், தொற்று பரவல் குறைவுக்கு ஏற்ப, மாவட்டம் வாரியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தொற்று பரவல் குறைந்ததால், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நேற்று முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டன.
அதன்படி, தேநீர் கடைகள் திறக்கப்பட்டு, காலை 6 மணி முதல்மாலை 7 மணி வரை இயங்கின. பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டது. சாலையோர தள்ளுவண்டி உணவுக்கடைகள் திறக்கப்பட்டன. சாப்பிட அனுமதி இல்லாததால் பொதுமக்கள் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து, பார்சல் வாங்கிச் சென்றனர்.
மின் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஹார்டுவேர், காலணி, பாத்திர கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், ஜெராக்ஸ் கடைகள், புகைப்பட நிலையங்கள், சலவை நிலையங்கள், தையல் கடைகள், மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் மற்றும் பழுது நீக்கும் கடைகள், வாகனங்கள் பழுது பார்க்கும் மையங்கள், வாகன விற்பனைய கங்கள், உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், எழுது பொருள், செல்போன், கணினி பொருட்கள், மென்பொருட்கள், மின்னணு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், கட்டுமானத்துக்கு தேவைப்படும் பொருட் கள் விற்பனை செய்யும் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. அனைத்து அத்தியாவசிய அரசுதுறைகளும் 100 சதவீத ஊழியர்களுடனும், இதர அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும் நேற்று செயல்பட்டன. ஏற்றுமதியல்லாத தொழிற்சாலைகளில் 33 சதவீத பணியாளர் கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சலூன்கள், அழகு நிலையங்கள் திறக் கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருந்து முடிதிருத்திச் சென்றனர். பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் நேற்று முதல் திறக்கப்பட்டன. தெர்மல் ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர்கள் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் 9மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாக கடந்த சில வாரங்களாக கோவையில் சாலைகள் வெறிச்சோடி கிடந்த நிலையில், நேற்று முதல் மீண்டும் வாகனப் போக்குவரத்தால் பரபரப்பாகிவிட்டன. வாகன ஓட்டுர்கள் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் மீண்டும் நெருக்கமாக கூடுவதால், கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கி விடுமோ என சுகாதாரத் துறையினர் அச்சமடைந்துள்ளனர்.
மாநகர போலீஸார் கூறும் போது, ‘‘காந்திபுரம், நஞ்சப்பா சாலை, பெரியகடைவீதி உள்ளிட்டமுக்கிய சாலைகளில் அதிகளவில் வாகனங்கள் செல்லத் தொடங்கியுள்ளன. இதனால் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள்முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றனர்.