

தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நேற்று காலை முதல் அமலானது. இதையொட்டி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல, 27 மாவட்டங்களுக்கு இடையில் பேருந்து போக்குவரத்து நேற்று தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து துணி, நகைக்கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டன.
மேலும், 27 மாவட்டங்களில் துணி, நகைக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று கடைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது. சென்னையிலும் வணிக வளாகங்களில் குறைந்த அளவு பொதுமக்களே அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் நேற்று காலை திறக்கப்பட்டன. முன்னதாக, கோயில் பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று காலை பிரதான கோயில்களில் பொதுமக்கள் காலை முதலே அதிக அளவில் வந்து தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகத்தினர் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை உறுதிப்படுத்தினர். பெரிய கோயில்களில் அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வுமேற்கொண்டனர்.
இதேபோல, உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டதால் இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.