Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM

சென்னை புறநகரில் மின்தடைக்கு நிரந்தரத் தீர்வு; துணை மின் நிலையங்கள், மின் பாதைகளில் பராமரிப்பு பணி நிறைவு: மின் வாரிய செயற்பொறியாளர் தகவல்

தாம்பரம்

சென்னை புறநகரில் மின் தடையை தவிர்க்க துணை மின்நிலையங்கள் மற்றும் மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு. பணிகள் நிறைவுபெற்றதாக மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டது. மின் உற்பத்தியில் பிரச்சினை இல்லை என்றாலும் மின்சாரத்தை கொண்டு செல்லும் மின் சாதனங்களில் குறைபாடுகள் உள்ளன. கடந்த 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் எதுவும் சரிவர நடைபெறவில்லை. அதுதான் தற்போதைய மின்தடைக்கு காரணம் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இதையடுத்து கடந்த 19-ம் தேதி முதல் நேற்று வரை போர்க்கால அடிப்படையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள மின் வாரியம் அறிவுறுத்தியது. இதற்காக மின் பகிர்மான வட்ட அளவில் பராமரிப்புப் பணிக்கு தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், அடையார் மற்றும் ஐ.டி.சி கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. சென்னை புறநகரில் மேற்கொள்ளப்பட்ட மின் பராமரிப்புப் பணிகள் குறித்து தாம்பரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாரி ராஜன் தெரிவித்துள்ளதாவது:

சென்னை தெற்கு அலகு 2 மின் பகிர்மான கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து உயர், தாழ்வு அழுத்த மின் பாதைகளிலும் முழுவதுமாக தரைவழி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மின் தடை ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டு, இதை நிரந்தரமாக சரிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் நேற்று தாம்பரம், அடையார் மற்றும் ஐ.டி.சி. கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உயர் மின் அழுத்த பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடந்தன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டன. 3 இடங்களில் தாழ்வான மின் பாதைகள் சரி செய்யப்பட்டன. 200 மின் பாதை திறப்பான்களில் உள்ள பழுதுகள் நீக்கப்பட்டுள்ளன. 35 கம்பங்கள் மாற்றப்பட்டன.

உதிரிபாகங்கள் மாற்றம்

தேவையான இடங்களில் 500-க்கும் அதிகமான உதிரி பாகங்கள் மாற்றப்பட்டன. மேலும் 41 துணை மின் நிலையங்களில் முறையாக பராமரிப்புப் பணிகள் நிறைவு பெற்றன. மேலும் மின்தடை தொடர்பாக ஏதேனும் புகார்இருந்தால் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மின் வாரிய உதவி பொறியாளரிடம் புகார் செய்யலாம் அல்லது 1912 மற்றும் 9498794987 எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x