Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM

சாலையோரங்களில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க ‘தூய்மை திருவள்ளூர்’ திட்டம் தொடக்கம்

தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில், ‘தூய்மை திருவள்ளூர்’ திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே முடிவு செய்தது.அதன்படி, நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ‘தூய்மை திருவள்ளூர்’ திட்டத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் குறித்து அமைச்சர் நாசர் கூறியதாவது: தூய்மை திருவள்ளூர் திட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து, முதல் கட்டமாக ஜூன் 28 முதல் ஜூலை 4-ம் தேதி வரை, ‘தூய்மை திருவள்ளூர்’ வாரமாக கடைபிடித்து, சாலை ஓரங்களில் குப்பையை பாதுகாப்பாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி மாநகராட்சி, 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள், ஊரக பகுதிகளில் வீடுகள் தோறும் குப்பைசேகரித்தல், குப்பைத் தொட்டிகளில் உள்ளகுப்பையை அப்புறப்படுத்துதல், தெரு ஓரங்களில் உள்ள குப்பையை அப்புறப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர், திருவள்ளூரில் மூன்றாம் பாலினத்தவர்கள் 426 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து, 100 பேருக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ.1,500 மதிப்பிலான 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய கரோனா நிவாரணப் பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வுகளில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிமுதல்வர் அரசி வத்சன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளுக்கான இணைஇயக்குநர் ராணி, திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, டி.ஜெ.கோவிந்தராஜன், துரை.சந்திரசேகர், சந்திரன், கணபதி, ஜோசப் சாமுவேல் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x