Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM

குரோம்பேட்டை அருகே ரூ.15 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு: இந்து அறநிலையத் துறை நடவடிக்கை

குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் உள்ள ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானரூ. 15 கோடி மதிப்புள்ள 2.14 ஏக்கர் நிலத்தை, இந்து அறநிலையத் துறையினர் அதிரடியாக மீட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரியில் இந்துஅறநிலையத் துறைக்கு சொந்தமான ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான 2.14 ஏக்கர் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரோட்டில் உள்ளது. இந்த நிலத்தைபல ஆண்டுகளாக 11 பேர் ஆக்கிரமித்திருந்தனர். இதன் மதிப்பு ரூ.15 கோடி. 2020-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் ஆகியோர் முன்னிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கோயில் நிலம் மீட்கப்பட்டது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிகழ்வின்போது காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ஜெயராமன், செங்கல்பட்டு மண்டல உதவி ஆணையர் க.கவெனிதா, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

இதுகுறித்து, அமைச்சர் பி.கே சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடங்கள் யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயிலுக்கு உண்டான சொத்துகளை பாதுகாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இதுவரை சுமார் 79 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டது. கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் தானாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x