ஸ்ரீரங்கத்தில் அஸ்திவார பணியின்போது வீடு இடிந்து 4 தொழிலாளர்கள் பலி; 10 பேர் காயம்

ஸ்ரீரங்கத்தில் அஸ்திவார பணியின்போது வீடு இடிந்து 4 தொழிலாளர்கள் பலி; 10 பேர் காயம்
Updated on
1 min read

திருச்சி ஸ்ரீரங்கம் மேற்கு உத்திர வீதியில் அஸ்திவார பணியின்போது அருகில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர், மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

திருச்சி மேற்கு உத்திர வீதியில் ரங்கன் என்பவர் பழைய வீட்டை வாங்கி, புதிய வீடு கட்டுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் இடித்துள்ளார். இந்த நிலையில், அந்த இடத்தில் அஸ்திவாரம் போடுவதற்காக பெல்ட் கான்கிரீட் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர். மதியம் சுமார் 3 மணியளவில் அருகேயுள்ள சவுமியநாராயணனின் பழமையான வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து கட்டுமானப் பணி நடைபெற்ற பகுதியில் விழுந்தது. இதில், அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் விரைந்து வந்து பொக்லைன் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேற்பார்வையாளர் தென்னூர் ரங்கநாதன்(30), தொழிலாளர்கள் முசிறி அருகே உள்ள குருவம்பட்டியைச் சேர்ந்த கோபி(40), லட்சுமணன்(50), ஸ்ரீரங்கம் ரமேஷ்(47) ஆகியோர் இடிபாடுகளில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.

மேலும், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குருவம்பட்டி சக்திவேல்(24), பெரிய கொடுந்துறை நீலமேகம்(42), ஸ்ரீரங்கம் தண்டபாணி(41), வீரமணிப்பட்டி சரவணன்(20), சக்திவேல்(42) ஆகியோர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

லேசான காயமடைந்த செல்லபாப்பா, லோகாம்பாள், சம்பூர்ணம், பிச்சையம்மாள் ஆகியோர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தலையில் காயமடைந்த சவுமியநாராயணன் ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியை துரிதப்படுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in