

குறைந்தளவு தண்ணீரில் அதிக லாபம் தரும் டிராகன் பழ சாகுபடியை, மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம் செய்வதற்காக தோட்டக்கலைத் துறை சார்பில் மதுரை மாவட்டம், மேலூர் அருகே பூஞ்சுத்தி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் செயல் விளக்கத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.
டிராகன் (கமலம்) பழம் கள்ளி வகை பழப்பயிர். இது லத்தீன் அமெரிக்காவில் தோன்றி தற்போது வியட்நாம், சீனா, மலேசியா, இந்தோனேசியா, இலங்கையில் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது.
உலகிலேயே வியட்நாம் டிராகன் பழ உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இந்தி யாவில் மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் விருதுநகர், ஈரோடு, மதுரை, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் சிறிய அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இதுகுறித்து மேலூர் வட்டாரத் தோட் டக்கலை உதவி இயக்குநர் ரா.நிர்மலா கூறியதாவது: டிராகன் பழம் வெப்ப மண்டலப் பயிர். 20 - 30 டிகிரி வெப்ப நிலை, மழையளவு 500 மிமீ – 1500 மிமீ உள்ள பகுதிகளில், களிமண் தவிர வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளிலும் வளரும். படரும் தன்மையுடையதால் செடி கள் படர அமைப்பு தேவைப்படுகிறது. இதற்கு அதிகளவு நீர் தேவை இல்லை.
சொட்டுநீர் அமைத்து சாகுபடி செய் வதால் அதிக மகசூல் கிடைக்கும். செடிகள் நடவு செய்து ஒன்றரை ஆண்டுகளில் மகசூல் கிடைக்கும். பூக்கள் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை பூக்கும். பழங்களை டிசம்பர் வரை அறுவடை செய்யலாம். முதலாண்டில் ஒரு ஏக்கருக்கு 1 - 1.5 டன்களும், 2-ம் ஆண்டில் 4 - 5 டன்களும்; 3-ம் ஆண்டிலிருந்து 8 - 10 டன்கள் பழங்கள் கிடைக்கும். தற்சமயம் ஒரு கிலோ கமலம் பழம் ரூ.150 வரை விற்கப்படுகிறது.
டிராகன் பழத்தில் அங்கக அமிலங்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் பழத்தில் 4 - 10 மிகி வைட்டமின் சி உள்ளன. மேலும் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகளும், அதிகளவு ஆண்டி ஆக்ஸிடன்டுகளும் உள்ளன. இப்பழங்களை சாப்பிடும் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு டிராகன் பழ சாகு படியை அறிமுகம் செய்ய மேலூர் அருகே பூஞ்சுத்தி அரசு தோட்டக்கலை பண்ணையில் டிராகன் பழ சாகுபடி மாதிரி விளக்கத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது செடிகள் பூத்து பழங்கள் உள் ளதால் விவசாயிகள் நேரடியாக வந்து பார்வையிடலாம். மேலும் விவரங்களுக்கு 97156 62587 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.