Last Updated : 29 Jun, 2021 06:13 AM

 

Published : 29 Jun 2021 06:13 AM
Last Updated : 29 Jun 2021 06:13 AM

1801-ம் ஆண்டில் மருது சகோதரர்கள் வெளியிட்டதன் அடையாளமாக மலைக்கோட்டை, ஸ்ரீரங்கத்தில் ‘ஜம்புத்தீவு பிரகடன’ நினைவுச் சின்னம்: பாடத் திட்டத்தில் சேர்க்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்

திருச்சி

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என வரலாற்றில் குறிப்பிடப்படும் சிப்பாய் கலகத்துக்கு(1857) முன்பாகவே தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

அதில் குறிப்பிடத்தகுந்தது சிவகங்கையை ஆட்சி செய்த மருது சகோதரர்களின் போராட்டம். மருது சகோதரர்கள் 1801 ஜூன் 16-ம் தேதி ஆங்கிலேயருக்கு எதிராக மக்களைத் திரட்டும் வகையிலான வாசகங்களுடன் கூடிய ‘நாவலந்தீவு பிரகடனம்’ என்ற ‘ஜம்புத்தீவு’ பிரகடனத்தை திருச்சி மலைக்கோட்டை வாசலிலும், ரங்கம் ரங்கநாதர் கோயில் மதில்சுவரிலும் வெளியிட்டனர். அதிலிருந்த வாசகங்கள் ஆங்கிலேயருக்கு கோபத்தை ஏற்படுத்தியதால், மருது சகோதரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, அதே ஆண்டு அக்.24-ம் தேதி திருப்பத்தூரில் அவர்களைத் தூக்கிலிட்டனர்.

220 ஆண்டுகள் நிறைவு

சுதந்திரப் போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரகடனம் வெளியிடப்பட்டு 220 ஆண்டுகள் ஆவதை நினைவூட்டும் வகையில், கடந்த 16-ம் தேதி ‘#1801ஜம்புத்தீவு_பிரகடனம்’ எனக் குறிப்பிட்டு, அதுதொடர்பான தகவல்களை ஏராளமானோர் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

சுதந்திரத்துக்கான முதல் வேள்விக்குரல்

இதுகுறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலை கூறும்போது, ‘‘ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்துக்கு சாதி, மதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்க மருது சகோதரர்கள் எந்தளவுக்கு முயற்சி செய்தனர் என்பதை அவர்கள் வெளியிட்ட ஜம்புத்தீவு பிரகடனத்தின் மூலம் அறியலாம். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் வேள்விக்குரலாக இதைக் கருதுகிறேன். ஆனால், இதுகுறித்து வரலாற்றில் போதியளவுக்கு பதிவு செய்யப்படவில்லை.

எனவேதான் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்காக ஜம்புத்தீவு பிரகடன நாளான ஜூன் 16-ம் தேதி ட்விட்டரில் இதுகுறித்து பதிவு வெளியிட்டேன். இதுபோல பலரும் பதிவிட்டதால் பேசுபொருள் ஆனது.

இப்பிரகடனம் வெளியிடப்பட்ட ரங்கம் கோயில், மலைக்கோட்டை வாசல் ஆகிய இடங்களில் அரசு சார்பில் நினைவுச் சின்னங்களை அமைக்க வேண்டும். இத்தகவல்களை பள்ளி பாடத் திட்டங்களில் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். மத்திய அரசிடமும் பேசி இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்’’ என்றார்.

தியாகத்தை பெருமைப்படுத்த வேண்டும்

திருச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் கே.சூர்யமூர்த்தி கூறும்போது, ‘‘இந்திய விடுதலைப் போராட்டத்தில் வட இந்தியர்களின் எழுச்சிக்கு முன்பே பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்டோர் ஆங்கிலேயரை எதிர்த்து உயிரைவிட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். எனவே இந்திய சுதந்திர வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து தொடங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதில் ஒன்றுதான், மருது சகோதரர்கள் திருச்சியில் வெளியிட்ட ஜம்புத்தீவு பிரகடனம். தமிழ் மக்களிடத்தில் சுதந்திர வேட்கை இல்லாமல் இருந்த காலத்திலேயே ஆங்கிலேயரை எதிர்த்து மருது சகோதரர்கள் தைரியமாக பிரகடனம் வெளியிட்டு போர் புரிந்து உயிர் நீத்தனர். எனவே, அவர்களின் தியாகத்தை பெருமைப்படுத்தும் வகையில் திருச்சியில் ஏதேனும் ஒரு இடத்தில் நினைவுச்சின்னம் ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

ஆலோசித்து நடவடிக்கை

இதுகுறித்து திருச்சி எம்.பி.யான சு.திருநாவுக்கரசரிடம் கேட்டபோது, ‘‘இப்பிரகடனத்தை நினைவுகூரும் வகையில் ரங்கம் அல்லது மலைக்கோட்டையில் நினைவுச் சின்னம் அமைக்க மத்திய, மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x