

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனையின் முதல்வர் கே.வனிதா செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்கென 100 படுக்கைகளுடன் கூடிய பிரத்யேக சிகிச்சைப் பிரிவு 3-வது தளத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கென அரசு வழிகாட்டுதல்படி கண், தொண்டை, பல், மயக்கவியல், நோயியல், நுண்ணுயிரியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு எந்தளவுக்கு நோய் பாதிப்பு உள்ளது, எந்த நிலையிலான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று இந்த மருத்துவக் குழுவினர் ஆலோசனை நடத்தி அதன்படி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கருப்பு பூஞ்சை பாதிப்பு உள்ளதா அல்லது நுண்ணுயிரியல் பாதிப்பு உள்ளதா என்று திசு பரிசோதனையின் மூலம் கண்டறிந்து, அதன்பிறகே பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. திசு பரிசோதனை முடிவு 24 மணி நேரத்துக்குள் பெறப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும். ஆனால், இங்கு முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகும். சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்தால் கருப்பு பூஞ்சை பாதிப்பு வராது. கருப்பு பூஞ்சை நோய் உருமாற்றம் அடையாது. ஒருவரிடத்தில் இருந்து மற்றொருவருக்குப் பரவாது.
திருச்சி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்புடன் இதுவரை 82 பேர் சேர்க்கப்பட்டனர். இதில், 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றார்.