

புதுச்சேரியில் 82 நாட்களுக்குப் பிறகு 200க்குக் கீழ் கரோனா ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 96.3 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் கரோனா தொற்றின் 2-வது அலை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் உச்சகட்டமாக மே 11-ம் தேதி ஒரே நாளில் 2,049 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உட்பட அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகத் தொற்று வெகுவாகக் குறைந்துள்ளது.
கடந்த ஏப்.7-ம் தேதி 17 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன் பிறகு தினமும் 200க்கு மேல்தான் தொற்று பாதிப்பு இருந்துவந்தது. இந்நிலையில் 82 நாட்களுக்குப் பிறகு ஒரே நாள் பாதிப்பு 200க்குக் கீழ் குறைந்துள்ளது.
இதுபற்றி புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் 7,251 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 115, காரைக்கால் - 14, ஏனாம் - 1, மாஹே- 14 பேர் என மொத்தம் 144 (1.99 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வில்லியனூரைச் சேர்ந்த 59 வயது முதியவர் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,745 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உள்ளது.
தற்போது ஜிப்மரில் 149 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 151 பேரும், கோவிட் கேர் சென்டரில் 36 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 2,063 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 2,479 பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போது 336 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் சதவீதம் 96.38 ஆக உள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 4,76,159 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது".
இவ்வாறு அருண் தெரிவித்தார்.