Published : 28 Jun 2021 03:15 PM
Last Updated : 28 Jun 2021 03:15 PM

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்கலாம்: அண்ணாமலை கருத்து

கரூர்

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்கலாம் என பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கரூர் வெங்கமேடு தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 28-ம் தேதி) நடைபெற்றது.

இதில் மாநிலத் துணைத்தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, காய்கறிகளை வழங்கினார். மாவட்டத் தலைவர் கே.சிவசாமி முன்னிலை வகித்தார். மாவட்டப் பொதுச் செயலாளர்கள் கே.பி.மோகன், நகுலன், மாவட்ட இளைஞரணித் தலைவர் கணேஷமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாநிலத் துணைத்தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியது:

’’புதுச்சேரியில் நடந்த அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ஆர்டிகிள் ஒன்றில் இடம் பெற்றுள்ள யூனியன் ஆஃப் இந்தியா என்ற வார்த்தைகளையே அம்மாநில ஆளுநர் தமிழிசை பயன்படுத்தியுள்ளார். அதற்கான விளக்கத்தையும் அவர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு என்பதன் மூலம் திமுக சொல்ல வருவது என்ன? அதன் உள்ளர்த்தம் என்ன? 2004-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெற்றிருந்தபோது அந்த வார்த்தையைப் பயன்படுத்தாதது ஏன்?

கடந்த 10 ஆண்டுகளாக மின் உபரி மாநிலமாக இருந்த தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின்தடை ஏற்படுவது ஏன்? அணிலால் மின் தடை ஏற்படுவது எனக் கூறுவதை ஏற்க முடியாது. காரணம் கூறுவதைத் தவிர்த்து மின்துறை அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, என்ன காரணம் எனக் கண்டறிய வேண்டும். இதனால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது. இப்போதே மக்கள் இதனைத் திமுக அரசின் ட்ரெய்லர் எனக் கூற ஆரம்பித்துவிட்டனர். அரசை விமர்சிக்க 6 மாத கால அவகாசம் அளிப்போம்.

கரூர் வெங்கமேட்டில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.அண்ணாமலை மாற்றுத்திறனாளிக்கு அரிசி, காய்கறிகளை வழங்கினார். அருகில் மாவட்டத் தலைவர் கே.சிவசாமி, வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்டோர்| படம்: க.ராதாகிருஷ்ணன்

சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் பற்றிய கருத்திற்கு காங்கிரஸ் எந்த பதிலும் அளிக்கவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் பிராந்தியக் கட்சியாகவும், திமுகவின் பி அணியாகவும் செயல்படுகிறது. இதில் அரசியல் வேண்டாம். பெட்ரோல், டீசல் விலையில் மாநில அரசுக்கு ரூ.37 முதல் ரூ.39 வரை வரி வருவாய் கிடைக்கிறது. எனவே ரூ.5 முதல் ரூ.7 வரை விலையைக் குறைக்கலாம்.

மத்தியில் காங்கிரஸ் இருந்தபோது பெட்ரோல் விலையைக் கடன் பத்திரங்கள் பெற்றுக் குறைத்தனர். அதற்கான அசல் மற்றும் வட்டி ரூ.1.10 லட்சம் கோடியைத் தற்போது பாஜக அரசு செலுத்தி வருகிறது. நீட் கிடையாது என்றார்கள். அதன்பின் தேர்வு இருக்கலாம் என்றார்கள். தற்போது இருக்கும் என்கின்றனர். இதனால் மாணவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பாஜக தயாராக உள்ளது’’.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x