Last Updated : 28 Jun, 2021 11:53 AM

 

Published : 28 Jun 2021 11:53 AM
Last Updated : 28 Jun 2021 11:53 AM

கரோனா ஊரடங்கு சமயத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்முறையாக்கும் பள்ளி மாணவர்

கரோனா ஊரடங்கு சமயத்தில் பாடப் புத்தகத்தில் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்முறையாக்கும் முயற்சியில் மாணவர் ரித்தீஸ் ஈடுபட்டு வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் ஊராட்சி ஜீவா நகரைச் சேர்ந்த வைரவன், பிரியங்கா தம்பதியரின் மகன் ரித்தீஸ் (12).

ஜீவா நகர் அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தார். தற்போது கீழாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கினால் பள்ளி செல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருந்தாலும், 5-ம் வகுப்பு வரை படித்த அறிவியல் பாடத்தில் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்முறையாகச் செய்து சாதித்து வருகிறார்.

இதுகுறித்து மாணவர் வி.ரித்தீஸ் கூறுகையில், "5-ம் வகுப்பு வரை படித்தபோது அறிவியல் பாடத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகள் இருந்தன. இவற்றை, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தவச்செல்வி கற்றுக்கொடுத்தார்.

அப்போது, அனைத்துக் கண்டுபிடிப்புகளையும் செய்முறையாகச் செய்ததில்லை. எனினும், நான் செய்திருந்த ராக்கெட் உள்ளிட்ட சில அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் பரிசும் அளிக்கப்பட்டது.

தற்போது, ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே இருப்பதால் அறிவியல் பாடத்தில் இருந்த, மண்ணைக் கொண்டு கழிவு நீரைக் குடிநீராக்குதல், காற்றாடி இறக்கை மூலம் காற்றாலை மின்சாரம் தயாரித்தல், வாழை மரம் மற்றும் உருளைக் கிழங்கில் இருந்து மின்சாரம் தயாரித்தல், செல்போனுக்கு நெட்வொர்க் கவரேஜ் அதிகப்படுத்துதல், சிறிய மோட்டார் மூலம் சிலந்தி ரோபோ, பம்புசெட் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறேன்.

இதற்குத் தேவையான பயன்பாடு இல்லாத பழைய பொருட்களைப் பெற்றோர் ஏற்பாடு செய்து தருவார்கள். இதுதவிர, சிறிய மோட்டார், பேட்டரி போன்ற குறைந்த விலையுள்ள பொருட்களையும் பெற்றோர் வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் விமானியாக வேண்டும் என்பதே எனது லட்சியம்" என்றார்.

ஊரடங்கு சமயத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் பெரும்பாலான மாணவர்கள் விளையாடியே பொழுதைக் கழித்து வரும் சூழலில், அறிவியல் பாடப் பகுதியில் உள்ள கண்டுபிடிப்புகளைச் செய்முறையாகச் செய்து வரும் மாணவர் ரித்தீஸை அப்பகுதியினர் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x